டிஎன்ஏ தொழில்நுட்ப மசோதாவை வாபஸ் பெற்றது மத்திய அரசு!

dna technology bill

டிஎன்ஏ தொழில்நுட்ப பயன்பாடு ஒழுங்குமுறை மசோதாவை மக்களவையில் இருந்து மத்திய அரசு திரும்பப் பெற்றது.

டிஎன்ஏ தொழில்நுட்பப் பயன்பாடு ஒழுங்குமுறை (DNA Technology Regulation Bill) மசோதாவை திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது. கடந்த 2019-ஆம் ஆண்டு டிஎன்ஏ தொழில்நுட்பப் பயன்பாடு ஒழுங்குமுறை மசோதா நாடாளுமன்ற மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. 2003ம் ஆண்டு இது தொடர்பாக முடிவுகள் மேற்கொள்ளப்பட்டு, 2015ம் ஆண்டில் திட்ட வரைவு முழு வடிவம் பெறப்பட்டது.

டிஎன்ஏ தொழில்நுட்ப மசோதா:

இதையடுத்து, 2019-ம் ஆண்டு மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.  ஆனால் மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேறவில்லை. மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாததால் மசோதா காலாவதியானது. பின்னா், அந்த மசோதாவானது அறிவியல்-தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், பருவநிலை மாறுபாட்டுக்கான நிலைக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில்,  அக்குழு கடந்த பிப்ரவரியில் அறிக்கையைத் தாக்கல் செய்திருந்தது.

ஏன் டிஎன்ஏ மசோதா?

குறிப்பிட்ட வழக்குகளில் குற்றவாளிகள், பாதிப்புக்கு உள்ளானோா், விசாரணைக் கைதிகள், காணாமல் போனோா், அடையாளம் காண முடியாதோா் உள்ளிட்டோரின் அடையாளங்களைக் கண்டறிய டிஎன்ஏ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதை ஒழுங்குபடுத்தும் நோக்கில் அந்த மசோதா உருவாக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக மனிதர்களிடம் இருந்து பெறப்படும் டி.என்.ஏவை பயன்படுத்தி குற்றவாளிகளைக் கண்டறிதல், தொலைந்து போனவர்களை கண்டறிதல் உள்ளிட்டவைகளுக்கு டி.என்.ஏ தொழில்நுட்பத்தின் பயன்பாடு மிகவும் முக்கியமானது. இதனை மனதில் கொண்டே மசோதா உருவாக்கப்பட்டது.

மசோதா வாபஸ்:

இந்த நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், டிஎன்ஏ தொழில்நுட்பப் பயன்பாடு ஒழுங்குமுறை மசோதாவை மக்களவையில் இருந்து திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது. இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான விதிகள், கடந்த ஆண்டு இயற்றப்பட்ட குற்றவியல் அடையாள நடைமுறைச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளதால், டிஎன்ஏ மசோதா திரும்பப் பெறப்படுவதாக கூறப்படுகிறது.

புதிய மசோதா?

மேலும், டிஎன்ஏ தொழில்நுட்பப் பயன்பாடு ஒழுங்குமுறை மசோதா திரும்ப பெறப்பட்டதை அடுத்து, மத்திய அரசு புதிய மசோதாவை உருவாக்குவதாகவும், புதிய மசோதா அடுத்த சில மாதங்களில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்