மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசு எடுக்க கூடாது – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே உண்மையான நிர்வாக அதிகாரம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
மாநில அதிகாரங்களை மத்திய அரசு எடுத்து கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என டெல்லி அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. டெல்லி யூனியன் பிரதேசத்தில் அரசுப் பணியாளர்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் யாருக்கு? என்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது.
ஜனநாயக ஆட்சி முறையில், உண்மையான நிர்வாக அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் கையில் இருக்க வேண்டும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் வழங்கப்படாதது தவறு .ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி கொள்கை என்பது நமது அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பின் ஒரு அங்கம் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.
எனவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது. தலைமை நீதிபதி அமர்வில் 5 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை அளித்துள்ளனர்.
அதன்படி, டெல்லியில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றத்தில் மாநில அரசுக்கே அதிகாரம் என்பது இந்த தீர்ப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், டெல்லி துணை நிலை ஆளுநருக்கே அதிகாரம் என்ற மத்திய அரசின் வாதம் நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.