“கேரளாவை கையை விரித்தது மத்திய அரசு” அரிசியை இலவசமாக கொடுக்க முடியாது..!!
திருவனந்தபுரம்:
பெருவெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பை எதிர்கொள்ள கேரள மாநிலத்திற்கு சிறப்பு ஒதுக்கீடாக வழங்கப்பட்ட 89ஆயிரத்து 540 மெட்ரிக் டன் அரிசி கிலோவுக்கு ரூ.26 என மத்திய அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது.
இதுகுறித்து கே.கே.ராகேஷ் எம்பிக்கு மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் எழுதியுள்ள கடிதத்தில், சிறப்பு ஒதுக்கீட்டு அரிசியை இலவசமாக வழங்க முடியாது எனவும், மத்திய அரசின் கொள்கைப்படி குறைந்தபட்ச விலைக்கு மட்டுமே அரிசி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவின்மூலம் கேரளத்திற்கு 230 கோடி ரூபாய் அளவுக்கு செலவு ஏற்படும்.பெருவெள்ள பாதிப்பை கணக்கில் கொண்டு கேரளத்திற்கு இலவசமாக அரிசி வழங்கப்பட்டுள்ளதாகவும், விலையை ஈடுசெய்வதா வேண்டாமா என்பது பின்னர் தீர்மானிக்கப்படும் என மத்திய அமைச்சர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
பெருவெள்ளம் அதிக அளவில் கேரளத்திற்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அரிசியை இலவசமாக வழங்க வேண்டும் என கே.கே.ராகேஷ் அமைச்சர் பஸ்வானை கடிதம் மூலம் கேட்டுக்கொண்டிருந்தார். அதற்கான பதில் தற்போது அனுப்பப்பட்டுள்ளது.தேசிய துயர்துடைப்பு நிவாரண நிதியிலிருந்து கேரளத்திற்கு அனுமதிக்கும் தொகையிலிருந்தோ, உணவு பாதுகாப்பு சட்டம் போன்ற மற்ற திட்டங்களிலிருந்தோ அரிசியின் விலை ஈடுசெய்யப்படும் எனவும் பஸ்வான் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். குறைந்தபட்ச அடக்கவிலை ஈடுசெய்யப்படும் எனவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு கிலோ அரிசிக்கான குறைந்தபட்ச அடக்கவிலை ரூ.26ஆக உள்ளது.
DINASUVADU