2 முதல் 18 வயது வரையுள்ளவர்களுக்கு கோவாக்சின் பரிசோதனை; பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி..!
2 முதல் 18 வயது வரையுள்ளவர்களுக்கு கோவாக்சின் பரிசோதனை செய்ய பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது.இதனால்,கொரோனா பரவலை தடுக்க அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன் முதற்கட்டமாக,முன்களப் பணியாளர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
இதனையடுத்து,கடந்த மே மாதம் 1 ஆம் தேதியிலிருந்து 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்தப் பணியில்,கோவாக்சின்,கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில்,கொரோனா மூன்றாவது அலையானது குழந்தைகளை அதிக அளவில் பாதிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனால்,2 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு கோவாக்சின் கொரோனா தடுப்பூசி மருந்தினை பரிசோதிப்பது குறித்து பாரத் பயோடெக் நிறுவனம் மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருந்தது.
இதனையடுத்து,2 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனையை நடத்த பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) அனுமதி வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இந்த பரிசோதனைகள் டெல்லி,பாட்னா,நாக்பூர் உள்ளிட்ட 525 இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) கூறுகையில்,”விரிவான ஆலோசனைகள் மற்றும் ஆய்வுகளுக்குப்பின்,2 வயது முதல் 18 வயது வரையுள்ளவர்களுக்கு கோவாக்சின் தடுப்பு மருந்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனைகளை நடத்திக் கொள்ள பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு மருத்துவ நிபுணர்கள் குழு அனுமதி வழங்கியுள்ளது.எனினும்,இரண்டாம் கட்ட பரிசோதனை அறி்க்கையை சமர்பித்த பின்னரே மூன்றாம் கட்ட பரிசோதனையை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது”, எனத் தெரிவித்துள்ளன.