ஜூன்-25 அரசியலமைப்பு படுகொலை தினம்.! மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
டெல்லி: ஜூன் 25ஆம் தேதியை அரசியலமைப்பு படுகொலை தினம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
1975ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் நாடு முழுவதும் அவசரநிலை எனும் எமெர்ஜென்சி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அப்போது நாட்டில் நிலவிய அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு இந்திய அரசியலமைப்பு 352வது பிரிவானது செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு எதிரான அனைத்து செயல்பாடுகளும் தடை செய்யப்பட்டு இருந்தன.
ஜூன் 25, 1975 அன்று இந்திராகாந்தி ஆலோசனையின் பெயரில் அப்போதைய குடியரசு தலைவர் ஃபக்ருதீன் அலி அகமது இந்த உத்தரவை பிறப்பித்தார். இந்த எமெர்ஜென்சி 1977 மார்ச் 21 வரையில் அமலில் இருந்தது. அப்போது பல்வேறு அரசியல் தலைவர்கள் மீதான கைது நடவடிக்கை, மாநில அரசுகள் கலைக்கும் சூழல் என நாடே பரபரப்பாக இருந்தது.
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இந்திராகாந்தி பிரதமராக இருந்த சமயம் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதால் பாஜகவினர் அதனை தற்போது வரையில் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஏற்கனவே இந்த அரசின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அவசரநிலை பிரகடனம் பற்றி பிரதமர் மோடி உட்பட பாஜக எம்பிக்கள் பலர் விமர்சனம் செய்து இருந்தனர். இதனால், காங்கிரஸ் கட்சியினர் நாடளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுப்பட்டனர். வெளியிலும் காங்கிரஸ் கட்சியினர் தொடர் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜூன் 25ஆம் தேதியை ” இந்திய அரசியலமைப்பின் படுகொலை தினம் ” என மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகையில், ஜூன் 25, 1975 அன்று, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, சர்வாதிகார மனநிலையின் வெளிப்பாடாக தேசத்தின் மீது எமர்ஜென்சியை விதித்து நமது ஜனநாயகத்தின் ஆன்மாவை சிதைத்தார்.
எந்தத் தவறும் செய்யாமல் லட்சக்கணக்கான மக்கள் சிறையில் தள்ளப்பட்டனர். பத்திரிகைகளின் குரல் அடக்கப்பட்டது. இந்த நாள் 1975ஆம் ஆண்டு அவசரநிலையின் வலிகளைத் தாங்கிய பலரின் மகத்தான பங்களிப்பை நினைவுகூரும் இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25 ஆம் தேதியை ‘ஜனநாயக படுகொலை தினம்’ ஆகக் கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளது.” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிவிட்டுள்ளார்.
On June 25, 1975, the then PM Indira Gandhi, in a brazen display of a dictatorial mindset, strangled the soul of our democracy by imposing the Emergency on the nation. Lakhs of people were thrown behind bars for no fault of their own, and the voice of the media was silenced.
The… pic.twitter.com/9sEfPGjG2S
— Amit Shah (@AmitShah) July 12, 2024