‘பயோலாஜிக்கல்-இ’ கொரோனா தடுப்பூசி;30 கோடி டோஸ் வாங்க மத்திய அரசு முன்பதிவு…!
ஹைதராபாத்தை சேர்ந்த ‘பயோலாஜிக்கல்-இ’ நிறுவனத்தின் 30 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்து வாங்க மத்திய அரசு முன்பதிவு செய்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது தீவிரமடைந்த நிலையில்,கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி,சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்புசி மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் என 2 தடுப்பூசிகள் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளன.மேலும்,ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.எனினும்,குறைந்த அளவிலேயே வினியோகம் செய்யப்பட்டுள்ளது.இந்த தடுப்பூசியும் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
இந்நிலையில்,ஹைதராபாத்தை சேர்ந்த ‘பயோலாஜிக்கல்-இ’ என்ற நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி ஓரிரு மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.மேலும்,இந்த தடுப்பூசி மருந்தானது தற்போது மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளது.
இந்நிலையில்,இந்தியாவில் தடுப்பூசி பற்றாக்குறையை போக்கும் வகையில்,ஹைதராபாத்தை சேர்ந்த ‘பயோலாஜிக்கல்-இ’ நிறுவனத்தின் தடுப்பூசி மருந்தினை 30 கோடி டோஸ் அளவிற்கு கொள்முதல் செய்ய மத்திய அரசு முன்பதிவு செய்துள்ளது.
மேலும்,அதற்காக முன்தொகையாக ரூ.1,500 கோடியை மத்திய சுகாதார அமைச்சகம் செலுத்த உள்ளது.ஏனெனில்,வருகின்ற ஆகஸ்டு மாதத்தில் தினமும் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தும் அளவிற்கு போதுமான அளவு தடுப்பூசி டோஸ்களை பெற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும்,பயோலாஜிக்கல் இ நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சிக்கு மத்திய அரசு சார்பில் ஏற்கனவே ரூ.100 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.