இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை கொடுப்பதில் உணர்வுப்பூர்வமாக முடிவெடுக்க முடியாது – மத்திய அரசு!

Default Image

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை கொடுப்பதில் உணர்வுப்பூர்வமாக முடிவெடுக்க முடியாது என மத்திய அரசு மதுரைக்கிளையில் வாதம் செய்துள்ளது.

திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த பலர் தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும் என கடந்த 2009 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, கடந்த 2019 ஆம் ஆண்டு மனுதாரர் அனைவரும் குடியுரிமை கோரி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும் எனவும், இந்த விண்ணப்பங்களை திருச்சி மாவட்ட ஆட்சியர் மத்திய அரசுக்கு தாமதமின்றி அனுப்பி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.

அதே சமயம் இந்த உத்தரவை முறையாக நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் அதிகாரிகள் மீது தாக்கல் செய்யப்பட்டு அதுவும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு எதிர் மனுதாரராக இருக்கக்கூடிய இலங்கை அகதிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி மற்றும் நீதிபதி துரைசாமி அவர்கள் அமர்வில் விசாரணைக்கு வந்துள்ளது.

அப்போது மத்திய அரசு தரப்பில், இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள். எனவே குடியுரிமை வழங்கும் விஷயத்தில் உணர்ச்சிபூர்வமாக முடிவெடுக்க முடியாது. சட்டத்துக்கு உட்பட்டே முடிவு எடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், தமிழக அரசு எதிர் மனுதாரர்களாகிய இலங்கை அகதிகளுக்கு அனுப்பிய நோட்டீஸ் சரியாக சென்று சேரவில்லை எனவும், தமிழக அரசு மீண்டும் எதிர் மனுதாரர்களாகிய இலங்கை அகதிகளுக்கு புதிதாக நோட்டீஸ் அனுப்பி, பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடுகிறோம் என கூறி இந்த வழக்கை 3 வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்