துண்டு துண்டாக வெட்டப்பட்டாரா வங்கதேச எம்.பி? வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சிகள்…
மேற்கு வங்கம்: வங்கதேச எம்.பி அன்வருல் ஆசிம் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் வெளியான சிசிடிவி காட்சிகளில் அவரது உடல் மறைத்து வைத்து கொண்டு செல்லப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
கடந்த மே 12ஆம் தேதி வங்கதேசம் அவாமி லீக் கட்சி எம்.பி அன்வருல் ஆசிம் அனார் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வந்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் தனது நண்பர் கோபால் பிஸ்வாஸ் வீட்டில் தங்கி இருந்த அனார் கடந்த 13ஆம் தேதி டெல்லி செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் அவரை காணவில்லை என அவரது நண்பர் புகார் அளித்து இருந்தார்.
14ஆம் தேதிஅன்வருல் ஆசிம் காணாமல் போன நிலையில், அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. மேற்கு வங்க மாநிலம் நியூ டவுண் பகுதியில் அன்வருல் ஆசிம் அனார் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என செய்திகள் வெளியாகின. ஆசிம் மரணத்தை வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் ஆசாதுஸ்மான் கான் உறுதிப்படுத்தினார்.
தற்போது இந்த கொலை தொடர்பான பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இன்னும் அன்வருல் ஆசிம் உடல் கிடைக்கவில்லை. அவரின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சூட்கேசில் அடைக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு இருக்கலாம் என இந்த வழக்கை விசாரித்து வரும் மேற்கு வங்க புலனாய்வு அமைப்பினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
மேற்கு வங்கம், நியூ டவுனில் உள்ள ஒரு அடுக்குமாடி வளாகத்தில் அன்வருல் ஆசிம் காணப்பட்டார் என சிசிடிவி காட்சிகள் வாயிலாக புலனாய்வு அமைப்பினர் கூறுகின்றனர். இதனால், அவர் அந்த அடுக்குமாடி குடியிருப்பிலேயே கொலை செய்யப்பட்டு, அவரது உடலை தோலுரித்து, வெட்டப்பட்டு அதனை பல்வேறு துண்டுகளாக பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து அப்புறப்படுத்தி இருக்கலாம் என்றும் சந்தேகின்றனர்.
VIDEO | Police recover CCTV visuals from the apartment in #Kolkata where #Bangladesh MP Anwarul Azim Anar was last seen with his friend.
The initial probe into the “murder” of Bangladesh MP Anwarul Azim Anar revealed that one of his friends had paid around Rs 5 crore to kill the… pic.twitter.com/Dnix44WHLf
— Press Trust of India (@PTI_News) May 24, 2024
மேற்கு வங்க புலனாய்வுத்துறையினர், அன்வருல் ஆசிமை ஒரு பெண் நியூ டவுன் பகுதி அடுக்குமாடி குடியிருப்புக்குள் இழுத்துச் செல்லப்பட்டார் என்றும், பின்னர் கொலையாளிகளால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கிறார் என்றும், இது தொடர்பாக ஷிலஸ்தி ரஹ்மான் என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் வங்கதேச செய்தி நிறுவனமான தி டெய்லி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது..
முதற்கட்ட விசாரணையில், அன்வருல் ஆசிம் நெருங்கிய நண்பரான அமெரிக்க குடியுரிமை கொண்ட அக்தருஸ்ஸாமான் ஷாஹின் என்பவர் தான் , கொலையாளிகளுக்கு சுமார் 5 கோடி ரூபாய் கொடுத்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வழக்கில் கொலையாளி என நம்பப்படும் ஜிஹாத் ஹவ்லதார் எனும் நபரையும் மேற்கு வங்க புலனாய்வு துறையினர் கைது செய்துள்ளனர் எனவும் மேலும் 4 பேருக்கு இந்த கொலையில் தொடர்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.