ஒடிசா ரயில் விபத்து காரணம் கண்டறியப்பட்டது… ரயில்வே அமைச்சர் கூறிய தகவல்.!
ஒடிசா பாலசோர் ரயில் விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே அமைச்சர் ஆய்வு செய்தபின் இன்று புதிய தகவல் தெரிவித்துள்ளார்.
ஒடிசா பாலசோர் ரயில் கோர விபத்தில் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் மற்றும் ஆயிரக்கணக்கானோருக்கு காயம் என நாட்டையே இந்த விபத்து பெரும் வேதனைக்குள்ளாக்கியது. இந்த ரயில் விபத்து மற்றும் மீட்புப்பணிகள் குறித்து சம்பவ இடத்தில் நேற்று முதல் ரயில்வே அமைச்சர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
பிரதமர் மோடி நேற்று விபத்து நடந்த இடத்தில் மீட்புப்பணிகள் நடைபெறுவது சீரமைப்பு பணிகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதையெல்லாம் நேரில் ஆய்வு செய்து பின், காயமடைந்தவர்களையும் சந்தித்து நலம் விசாரித்தார். நேற்று தொடங்கி இன்றைக்கு வரை ரயில் பெட்டிகள் மற்றும் உடல்கள் அகற்றும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் விபத்துக்கான காரணம் குறித்தும் அதற்கு காரணமானவர்களையும் கண்டறிந்துள்ளதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், நேற்று மேற்குவங்க முதல்வர் கூறியது போல் கவாச்-க்கும் (ரயில் பாதுகாப்புக்கு பொருத்தப்படும் சாதனம்) விபத்திற்கு தொடர்பு இல்லை. மின்னணு இன்டர்லாக்(சிக்னல்) மாற்றத்தால் தான் இந்த விபத்து நடந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
எலக்ட்ரானிக் இன்டர்லாக் எனும் சிக்னல் மாற்றத்தினால் இந்த கோர விபத்து நடந்துள்ளது, ஆனால் தற்போது எங்களின் கவனம் முழுதும் விரைவில் சீரமைப்பு பணிகளை முடிப்பதில் தான் என்று அமைச்சர் மேலும் கூறினார்.