இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடர்… முக்கிய நிகழ்வுகள் என்ன.?
டெல்லி: தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ள பாஜக, இம்முறை தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து NDA கூட்டணி தலைமையிலான ஆட்சியை பாஜக அமைத்துள்ளது. ஆட்சி அமைத்த பிறகு கடந்த ஜூன் 24 முதல் ஜூலை 3ஆம் தேதி வரையில் முதல் கூட்டத்தொடர் நடைபெற்றது.
அதன் பிறகு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய இன்று கூட்டத்தொடர் தொடங்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக நேற்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து, 2024-2025ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நாளை (ஜூலை 23) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளர். 2019இல் முழு பட்ஜெட் தொடங்கி 5 முழு பட்ஜெட், கடந்த பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட் என மொத்தம் 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன், இம்முறை 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார்.
பட்ஜெட் கூட்டத்தொடருக்காக இன்று (ஜூலை 22) முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி உள்ளது. இன்று முதல் ஆகஸ்ட் 12 வரையில் 19 நாட்கள் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற உள்ளது.
நாளை மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ள நிலையில், அதற்கு முன்னதாக வழக்கமான நிகழ்வான நாட்டின் பொருளாதார அறிக்கையை நாடாளுமன்றத்தில் இன்று (ஜூலை 22) நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த முறை பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளதால், கூட்டணி கட்சி எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் பாஜக உள்ளது. அதே போல, எதிர்க்கட்சிகளின் பலமும் அதிகரித்து உள்ளதால், நாடாளுமன்றத்தில் அவர்கள் குரலும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. அது கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிரொலித்தது.
அதற்கேற்றாற் போல, பட்ஜெட் கூட்டத்தொடர் தொடக்க நாளிலேயே நீட் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் நாடாளுமன்ற ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்துள்ளார். அதே போல, உத்திர பிரதேச கன்வர் யாத்திரை, காஷ்மீரில் ராணுவ வீரர்கள் மீதான தொடர் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து எதிர்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபடும் என எதிர்பார்க்கபடுகிறது.