குடியரசு தலைவர் உரையுடன் இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடர்.!
பிரதமர் மோடி தலைமையிலான இந்தியாவின் 17வது அமைச்சரவையின் பதவிக்காலம் இந்த ஆண்டு மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதனை அடுத்து வரும் ஏப்ரல், மே மாதங்களில் நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு அடுத்த மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக கடிதம்.! தற்போது தமிழக GST அதிகாரி சஸ்பெண்ட்.!
இந்நிலையில் இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. தேர்தல் நெருங்கும் வேளை என்பதால் தற்போது தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இடைக்கால பட்ஜெட்டாக உள்ளது. இதனை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.
தேர்தல் நேரம் என்பதால் இடைக்கால பட்ஜெட் மீதான கவனம் அதிகரித்துள்ளது. புதிய வரிச்சலுகைகள், புதிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு. உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று குடியரசுத் தலைவர் உரையுடன் துவங்குகிறது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மக்களவை மாநிலங்களவை என இரு அவைகளிலும் கூட்டாக சேர்த்து தனது உரையை ஆற்ற உள்ளார். குடியரசுத் தலைவர் உரையுடன் இன்றைய கூட்டத்தொடர் நிறைவு பெரும். அதனை தொடர்ந்து நாளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்வார்.
பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு நேற்று டெல்லி நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. பட்ஜெட் கூட்டத்தொடர் முழுமையாக நடைபெற அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என மத்திய அரசு சார்பில் கேட்டு கொள்ளப்பட்டது.
இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில், முன்னதாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட 14 நாடாளுமன்ற உறுப்பினர்களின் சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டது என நாடாளுமன்ற விசாரணை குழு பரிந்துரைக்கு பின்னர் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார். இதன் மூலம் இன்று அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க உள்ளனர்.