ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்..104 மணிநேர போராட்டத்துக்கு பிறகு மீட்பு!
சத்தீஸ்கரில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை சுமார் 100 மணிநேர போராட்டத்துக்கு பிறகு வெற்றிகரமாக மீட்டனர்.
சத்தீஸ்கார் மாநிலம் ஜான்ஜீர் சம்பா மாவட்டம் மால்காரோடா அருகே உள்ள பிக்ரிட் கிராமத்தை சேர்ந்த லாலா ராம் சாகு என்பவற்றின் 11 வயது மகன் ராகுல் சாகு, கடந்த ஜூன் 10ம் தேதி மதியம் ஆழ்துளை கிணறு (போர்வெல்) அருகே சென்றே போது எதிர்பாராத விதமாக தவறி அதில் விழுந்தார். இதனிடையே, சிறுவனின் தந்தை லாலாராம் சாகு தனது வீட்டின் பின்பு 80 அடிக்கு போர்வெல் எனப்படும் ஆழ்துளை கிணறு ஒன்றை அமைத்து இருந்தார்.
இதனை பயன்படுத்தி வீட்டுக்கு தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்து வந்தாக கூறப்படுகிறது. இதன்பின் ஆழ்துளை கிணற்றில் நீர் வற்றிய நிலையில், போர்வெல் பயன்பாடு இன்றி, மூடப்படாமல் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், எதிர்பாராத விதமாக 11 வயது சிறுவன், அந்த போர்வெல் எனப்படும் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்ததை அடுத்து, குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் துணியை பயன்படுத்தி மீட்க முயன்ற நிலையில், அவர்களால் முடியவில்லை என கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மாலை 4 மணிக்கு மீட்பு பணயை தொடங்கினர். சிறுவனை மீட்க போர்வெல்லின் பக்கத்தில் ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி ஒருபக்கம் நடைபெற்ற நிலையில், மறுபக்கம் சிறுவனின் சுவாசத்துக்கு தேவையான ஆக்சிஜன், குழாய் மூலம் வழங்கப்பட்டது. கிணற்றில் சிக்கிய சிறுவனை மீட்கும் பணி தீவிரமடைந்த நிலையில், மாநில, தேசிய பேரிடர் படையினர், ராணுவம், போர்வெல் மீட்பு சிறப்பு வல்லுனர்கள் ஆகியோர் மீட்பு பணியில் இணைந்தனர்.
இவர்கள் கம்ப்யூட்டர், கேமரா உதவியுடன் சிறுவனின் அசைவுகளை மேல் இருந்து கண்காணித்து வந்தனர். அப்போது சிறுவன் 60 அடி ஆழத்தில் சிக்கியிருந்தது தெரியவந்தது. இதன்பின் சுமார் 104 மணிநேர போராட்டத்துக்கு பிறகு நேற்று இரவு சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட சிறுவனை ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த நிலையில், சிறுவனுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும், சிறுவன் உடல்நிலை நலமாக இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.