புனே ஆற்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரின் உடல்கள் மீட்பு..! 5 பேர் கைது..!
புனே ஆற்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதையடுத்து 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள பீமா ஆற்றங்கரையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் இறந்துள்ள அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் நான்கு பேரின் உடல்கள் ஜனவரி 18 மற்றும் ஜனவரி 22 க்கு இடையில் கண்டெடுக்கப்பட்டது எனவும் மற்ற மூன்று பேரின் உடல்களும் புனேவிலிருந்து 45 கிமீ தொலைவில் உள்ள பீமா ஆற்றின் பர்கோன் பாலத்தின் அருகே மீட்கப்பட்டுள்ளது என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். இவர்கள் மராத்வாடா பகுதியில் உள்ள பீட் மற்றும் ஒஸ்மானாபாத் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் எனக் கண்டறியப்பட்டது.
இறந்தவர்கள் மோகன் பவார் மற்றும் அவரது மனைவி சங்கீதா மோகன், அவர்களது மகள் ராணி ஃபுல்வேர், மருமகன் ஷியாம் புல்வேர் மற்றும் மூன்று முதல் ஏழு வயதுடைய மூன்று குழந்தைகள் என போலீசாரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டதில் நான்கு உடல்களின் பிரேதப் பரிசோதனையில் நீரில் மூழ்கியதே மரணத்திற்குக் காரணம் என தெரிய வந்துள்ளது.