எச்சரிக்கை!கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களை தாக்கும் கருப்பு பூஞ்சை நோய்..!
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களை கருப்பு பூஞ்சை என்ற நோய் தாக்குவதால்,அதன் தடுப்பு மருந்துகளின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல்நிலை மிகவும் மோசமாகும் போது,அதிகளவில் ஸ்டீராய்டு மருந்து கொடுக்கப்படுகிறது.இதனால்,நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து உடலில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது,இதன்காரணமாக ‘பிளாக் ஃபங்கஸ்’ என்ற ‘கருப்பு பூஞ்சை நோய்’ (மியூகோர்மைகோசிஸ்) ஏற்படுகிறது.
மேலும்,இந்த கருப்பு பூஞ்சை நோய் தொற்று ஏற்பட்டால் கண்,மூக்கு, மூளை,ஆகியவை பாதிக்கப்படும்.சில நேரங்களில்,பாதிக்கப்பட்ட உடல் உறுப்பையும் நீக்க வேண்டிய சூழல் ஏற்படலாம்.
இந்நிலையில்,மத்தியப்பிரதேசத்தில் இதுவரை 13 பேர் கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும்,2 பேர் பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து,மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலத்திலும் கருப்பு பூஞ்சை நோய் தொற்று அதிகரித்து வருகிறது.
இதனால்,கருப்பு பூஞ்சை நோயினை கட்டுப்படுத்த மருத்துவர்கள் ‘அம்ஃபோடெரிசின் பி’ என்ற மருந்தினை பரிந்துரைக்கின்றனர். இதன்காரணமாக, இந்த மருந்தின் தேவை சில மாநிலங்களில் அதிகரித்துள்ளது.
இதனையடுத்து,மத்திய அரசானது ‘அம்ஃபோடெரிசின் பி’ மருந்தின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக,அதன் தயாரிப்பாளர்களுடன் இணைந்துள்ளது.மேலும்,வெளிநாடுகளில் இருந்து இந்தக் குறிப்பிட்ட மருந்தின் இறக்குமதியை அதிகரித்து,உள்நாட்டில் அதன் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும் என்று மருந்து தயாரிக்கும் நிறுவனங்களிடம் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.