10 நாள் சஸ்பென்ஸ் ஓவர்…. ராஜஸ்தான் மாநிலத்துக்கும் புதுமுக முதலமைச்சர்.! பாஜக அறிவிப்பு.!
கடந்த மாதம் 5 மாநில தேர்தல் முடிவடைந்து இம்மாதம் 3ஆம் தேதி அதன் முடிவுகள் வெளியாகின. இதில் தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும், மிசோராம் மாநிலத்தில் சோரம் மக்கள் இயக்கமும் ஆட்சியை பிடித்தன. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை கைப்பற்றியது.
தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அம்மாநிலத்தின் முதல்வராக ரேவந்த் ரெட்டி அறிவிக்கப்பட்டு முதலமைச்சராக பதவி ஏற்றுவிட்டார். மிசோரம் மாநிலத்தில் ஜோரம் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றதை அடுத்து அக்கட்சி தலைவர் லால்டுஹோமா முதலமைச்சராக பொறுப்பேற்று விட்டார்.
மத்திய பிரதேச முதல்வராக மோகன் யாதவ் தேர்வு..!
அதன் பிறகும் சில நாட்கள் 3 மாநில முதல்வர்கள் யார் என அறிவிக்காமல் இருந்து வந்தது. இதனை தொடர்ந்து 3 மாநிலத்திற்கும் முதலமைச்சர் தேர்வு குறித்து மேலிட பொறுப்பாளர் குழுவை பாஜக தலைமை நிர்ணயித்தது. அவர்களை கொண்டு ஒவ்வொரு மாநிலத்திலும் எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தி முதலமைச்சர்களை அறிவித்து வந்தனர்.
அதன் படி கடந்த ஞாயிற்று கிழமை, சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலமைச்சராக பழங்குடியினத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் பாஜக மாநில தலைவருமான விஷ்ணு தியோ சாய் தேர்வு செய்யப்பட்டார். அடுத்ததாக, நேற்று மத்தியப் பிரதேச மாநிலத்தின் புதிய முதலமைச்சராக மோகன் யாதவை தேர்வு குழு அறிவித்தது. இவர், கடந்த சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான மத்திய பிரதேச மாநில அரசில் மோகன் யாதவ், கல்வித்துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து இன்று ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அம்மாநில முதல்வராக பஜன்லாஸ் சர்மா தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு மத்திய அமைச்சரும் ராஜஸ்தான் முதல்வர் தேர்வு குழு உறுப்பினருமான ராஜ்நாத் சிங் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.
ராஜஸ்தான் மாநில முதல்வராக முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதுமுக முதலமைச்சரை பாஜக அறிவித்துள்ளது. அதன்படி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் என மூன்று மாநிலத்திற்கும் புதுமுக முதலமைச்சர்களை பாஜக அரசு அறிவித்துள்ளது.