துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது.! டெல்லி பட்ஜெட் தயாராவதில் தாமதம்.?
டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதால் டெல்லியில் பட்ஜெட் தயார் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் அமல்படுத்தப்பட்ட புதிய மதுபான கொள்கையில் முறைகேடு நடந்து இருப்பதாகவும், அதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு தொடர்பு இருப்பதாக சிபிஐ குற்றம் சாட்டி இருந்தது.
சிசோடியா கைது : இதன் அடிப்படையில், கடந்த ஞாயிற்று கிழமை அவரது வீட்டில் சுமார் 8 மணிநேரம் விசாரணை செய்து அதன் பிறகு பதில் சரியாக கிடைக்கவில்லை என கூறி, அவரை ஞாயிறு இரவு சிபிஐ போலீசார் கைது செய்தனர்.
5 நாள் காவல் : அதன் பிறகு நேற்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அங்கு மணீஷ் சிசோடியாவை 5 நாள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
டெல்லி பட்ஜெட் : இந்நிலையில், டெல்லி சட்டமன்றத்தில் பட்ஜெட் தயார் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தான் டெல்லி மாநில நிதியமைச்சராக இருக்கிறார். அவர் தற்போது கைது செய்யப்பட்டு விட்டதால் பட்ஜெட் தயாரிக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.