மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு எதிர்ப்பு…!கவனத்தில் கொள்வோம்…!காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசேன்
மேகதாது விவகாரத்தில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதி தேவை என்று காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசேன் தெரிவித்துள்ளார்.
கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் பங்கேற்றுள்ள காவிரி மேலாண்மை வாரியத்தின் 2-வது கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் சார்பில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் மற்றும் தொழில்நுட்பத்துறை தலைவர் சுப்ரமணியம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட முயற்சி மேற்கொண்டுள்ள கர்நாடக அரசுக்கு இந்தக் கூட்டத்தில் தமிழக அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.
கர்நாடக அரசு மேகதாது குறித்த வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய நீர்வள ஆணையம் அளித்துள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இதன் பின் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசேன் கூறுகையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் அடுத்த கூட்டம், ஜனவரியில் நடைபெறும் .இன்று நடைபெற்ற கூட்டம் பயனுள்ளதாக அமைந்தது. சில விஷயங்களில் முடிவு எடுத்துள்ளோம் காவிரி விவகாரத்தில் அனைத்து உறுப்பினர்களும் விரிவாக விவாதித்தோம் .இந்தாண்டு பருவமழை சிறப்பாக உள்ளது.காவிரி படுகை பகுதிகள் நல்ல மழை பெற்றிருக்கின்றன.மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளது. அவற்றை கவனத்தில் கொள்வோம். மேகதாது விவகாரத்தில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதி தேவை என்றும் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசேன் தெரிவித்துள்ளார்.