மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று 46-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்!
டெல்லி:மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று 46-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெறவுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில்,ஜிஎஸ்டி கவுன்சிலின் 46-வது கூட்டம் டெல்லியில் உள்ள விக்யான் பவனில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றத்தில் நிதியமைச்சரால் வருகின்ற பிப்ரவரி முதல் தேதி தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக இந்த கூட்டம் நடைபெறுவதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் இது நான்காவது பட்ஜெட் கூட்டமாகும்.
இந்த கூட்டத்தில் மத்திய நிதியமைச்சகத்தின் இணை அமைச்சர்கள் பங்கஜ் சவுத்ரி மற்றும் டாக்டர் பகவத் கிஷன்ராவ் காரத் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.மேலும்,அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய அரசு மற்றும் மாநிலங்களின் மூத்த அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
வரிச் சீர்திருத்தம் தொடர்பான மாநில அமைச்சர்கள் குழுவின் அறிக்கை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும்,விகிதப் பகுத்தறிவு குறித்து அமைச்சர்கள் குழு (GoM) சபைக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.குறிப்பாக,இந்த கூட்டத்தில் சில பொருள்கள் மீதான வரி விகிதம் குறைப்பு அல்லது மாற்றியமைக்கப்படுவது குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
இதற்கிடையில்,செப்டம்பர் 17 அன்று லக்னோவில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஜவுளி மற்றும் காலணி பொருட்கள் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது.ஆனால்,குஜராத், மேற்கு வங்கம், டெல்லி, ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் ஜவுளி பொருட்கள் மீதான அதிக வரி விகிதத்தை,கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.
இதனைத் தொடர்ந்து,சத்தீஸ்கர்,கேரளா,டெல்லி மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநில அரசுகள்,கொரோனா தொற்றுநோயால் உருவாக்கப்பட்ட நிதி அழுத்தத்தைக் கருத்தில் கொண்டு மேலும் ஐந்தாண்டு காலத்திற்கு ஜிஎஸ்டி இழப்பீட்டைத் தொடர வேண்டும் என்று நேற்று முன்தினம் வலியுறுத்தியுள்ளன.
அதன்படி,மத்திய அரசு வழங்கும் திட்டங்களில் (சிஎஸ்எஸ்) மத்திய அரசின் பங்கை உயர்த்துமாறு பல மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.இந்த நிலையில்,இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
FM Smt. @nsitharaman will chair the 46th meeting of the GST Council in New Delhi, tomorrow. The meeting will be attended by MoS for Finance Shri @mppchaudhary & Shri @DrBhagwatKarad, besides Finance Ministers of States & UTs and Senior officers from Union Government & States. pic.twitter.com/S1rDGN0TIf
— Ministry of Finance (@FinMinIndia) December 30, 2021