இந்தியாவில் மோடி ஏற்படுத்திய பேரழிவு தான் கொரோனாவின் 2-ஆம் அலை – மம்தா பானர்ஜி !
இந்தியாவில் மோடி ஏற்படுத்திய பேரழிவு தான் கொரோனாவின் இரண்டாம் அலை என மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அவர்கள் கூறியுள்ளார்.
நாடு முழுவதிலும் கொரோனா வைரஸின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. ஒருபுறம் மக்கள் கொரோனாவால் உயிரிழந்தாலும், மறுபுறம் நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகம் காணப்படுகிறது. இதன் காரணமாக பல மருத்துவமனைகளில் நோயாளிகள் ஆக்சிஜனின்றி உயிரிழக்க நேரிடுகிறது. இதனால், சுகாதாரத்துறை பெரும் சிக்கலை எதிர் கொண்டு வருவதுடன் நாளுக்கு நாள் நாட்டின் நிலை மோசமாகிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், தினாஜ்பூர் எனும் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள்,கொரோனாவின் இரண்டாம் அலை தற்போது நாட்டில் வீரியமாக உள்ளதாகவும், இது மோடி நாட்டில் ஏற்படுத்திய பேரழிவு என்றுதான் நான் கூறுவேன் எனவும் தெரிவித்துள்ளார். ஏனென்றால் தடுப்பூசிக்கும் ஆக்சிஜனுக்கும் நாட்டில் பஞ்சம் நிலவும் சூழ்நிலையும் வெளிநாடுகளுக்கு தடுப்பூசி மருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு கொண்டுதான் இருக்கிறது.
கொரோனாவை நாட்டில் கட்டுப்படுத்துவோம் என மத்திய அரசு கடந்த 7 மாதங்களுக்கு முன்பாக கூறினாலும், மேற்கு வங்கத்தில் தேர்தலுக்காக வெளிமாநிலங்களில் இருந்து மக்களை அழைத்து வந்து இங்கும் கொரோனாவை பரப்ப தான் பாரதிய ஜனதா இவ்வாறு செய்துள்ளது என குற்றம்சாட்டியுள்ளார். மேலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடிய மையங்கள் குறைவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ள அவர், நீங்கள் அனைவரும் இந்த மாநிலத்தின் குடிமக்கள் எனவும், நீங்கள் கவலைப்பட வேண்டாம் உங்களுக்கு காவலாளியாக நான் இருப்பேன் எனவும் பொதுமக்களிடம் கூறியுள்ளார்.