டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 23வது கூட்டம் தொடங்கியது..!
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 23வது கூட்டம் டெல்லியில் தொடங்கியது. தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை செயலாள் சந்தீப் சக்சேனா மற்றும் காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழ்நாடு, கர்நாடக அரசு முன்வைத்த கோரிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
புதுச்சேரி அரசு சார்பில் தலைமை பொதுப்பணித்துறை பொறியாளர் பழனியப்பன் காணொளி காட்சி வாயிலாக பங்கேற்றார். காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் புதுச்சேரி, கேரளா, கர்நாடக மாநில அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். காவிரி நீர் மேலாண்மை கூட்டத்தில் தமிழக அரசின் நீர் பங்கீடு தொடர்பான அவசர மனு மீது முடிவு எடுக்கப்பட உள்ளது.
காவிரியில் இருந்து 15 நாட்கள் 5 ஆயிரம் கன அடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்திருந்தது. 10 நாட்களுக்கு 24 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. தமிழக அரசு தொடர்ந்த அவசர மனு மீது காவிரி மேலாண்மை ஆணையம் முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் ஆணையிட்டிருந்த நிலையில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது.
முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள், காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் திறப்பது போதாது. தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 24,000 கன அடி நீர் கிடைத்தால் தான் நன்றாக இருக்கும். இது இன்று டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வலியுறுத்தப்படும் என தெரிவித்து இருந்தார்.