தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி – காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ட்வீட்
நம் நாட்டின் மற்ற எல்லா மாநில மக்களுடன் தமிழர்களும் என் சகோதர சகோதரிகள் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ட்வீட்.
நாடாளுமன்றத்தில் நேற்று குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தின்போது பேசிய வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி.யும், கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி, மாநில உரிமைகளை எவ்வாறு காப்பது? என்று ஒட்டுமொத்த இந்தியாவும் தமிழகத்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறினார்.
இந்தியாவில் இரண்டு விதமான பார்வை உண்டு. அதில் ஒன்றுதான் இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்ற பார்வை. கூட்டாட்சி என்பது அதன் அர்த்தம். தமிழ்நாட்டில் உள்ள என் சகோதரரிடம் நான் சென்று உங்களுக்கு என்ன வேண்டும் எனக் கேட்பேன். அவர் அவரது தேவையை என்னிடம் சொல்வார். அதேபோல எனக்கு தேவையானதை கேட்டுப் பெறுவேன், இதுதான் கூட்டாட்சி. இந்தியா என்பது ராஜாங்கம் கிடையாது. பல மாநிலங்களால் இணைந்த ஒன்றியம் என தெரிவித்தார்.
பாஜகவால் தங்களுடைய வாழ்நாளில் ஒருபோதும் தமிழக மக்களையும், தமிழகத்தையும் ஆள முடியாது. தமிழ்நாடு நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு கோரிக்கை வைக்கிறது. ஆனால் மத்திய அரசு அதை மறுத்து விரட்டி அடிக்கிறது. தமிழ் மக்கள், தமிழ் மொழி, தமிழ் கலாசாரம் ஆகியவை தனித்துவம் வாய்ந்தவை, அவற்றுக்கு மத்திய அரசு மதிப்பு அளித்து சம உரிமை வழங்க வேண்டும் என்றும் தமிழகத்தை குறிப்பிட்டு அதிகமுறை பேசியது ஏன் என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, ‘நான் ஒரு தமிழன்’ என்று பதில் அளித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் தங்களின் எழுச்சியூட்டும் உரைக்கு அனைத்துத் தமிழர்கள் சார்பாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு நன்றி என முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கருத்தை அழுத்தமாக எடுத்துரைத்து, சுயமரியாதையை மதிக்கும் தனித்துவமான கலாச்சார மற்றும் அரசியல் வேர்களில் தங்கியிருக்கும் தமிழர்களின் நீண்ட கால வாதங்களை பாராளுமன்றத்தில் நீங்கள் குரல் கொடுத்திருக்கிறீர்கள் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், ஒட்டுமொத்த தமிழர்கள் சார்பாகவும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக மு.க.ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியும் நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், நம் நாட்டின் மற்ற எல்லா மாநில மக்களுடன் தமிழர்களும் என் சகோதர சகோதரிகள். உங்களின் கனிவான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி என்றும் இந்தியாவின் பன்முகத்தன்மை, கூட்டாட்சி மற்றும் கூட்டுறவு யோசனையில் நமது பகிரப்பட்ட நம்பிக்கை வெற்றி பெறும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
The Tamils, along with the people of every other state of our country, are my brothers & sisters.
உங்களின் கனிவான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி திரு @Mkstalin அவர்களே!
I have no doubt that our shared belief in the pluralistic, federal & cooperative idea of India will triumph. https://t.co/wrQKM9cPYw
— Rahul Gandhi (@RahulGandhi) February 3, 2022