அன்பும், ஆதரவும் அளித்த மக்களுக்கு நன்றி – டெல்லியில் ராகுல் காந்தி பேட்டி
அவதூறு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. தண்டனை நிறுத்தி வைத்ததால், ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிப்பு நிறுத்தப்பட்டது. உச்சநீதிமன்றம் தீர்ப்பை தொடர்ந்து, ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அதில், என்ன நடத்தாலும் என்றும் என் கடமை மாறாது. இந்தியா என்ற எண்ணத்தைப் பாதுகாப்போம் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, அன்பும், ஆதரவும் அளித்த மக்களுக்கு நன்றி. எம்பி பதவியில் இருந்து நீக்கப்பட்ட விவகாரத்தில் உறுதுணையாக இருந்த நாட்டுமக்களுக்கு நன்றி. தனது கடமை என்ன என்பதில் தான் தெளிவாக இருப்பதாகவும், எதுவாக இருப்பினும் உண்மை வெல்லும், எனது பாதையில் நான் தெளிவாக இருக்கிறேன் என தெரிவித்தார்.
ராகுலை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மதிக்கிறோம், நீதி கிடைக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம். ஜனநாயகம் வென்றுள்ளது.சத்தியம் வென்றுள்ளது. உண்மை மட்டுமே வெல்லும், உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம்.
எதிர்க்கட்சி தலைவர்களை குறி வைப்பதை நிறுத்த வேண்டிய நேரம் இது. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ராகுல்காந்தி சந்தித்த குழந்தைகள், பெண்கள், பெரியோர்கள், இளைஞர்கள் என அனைவரின் ஆசீர்வாதத்தால் கிடைத்த தீர்ப்பு. தகுதிநீக்க உத்தரவை இன்று இரவுக்குள் திரும்பப் பெறுவார்கள் என எதிர்பார்க்கிறோம் எனவும் தெரிவித்தார்.