ஏழைகளை மறக்காமல் இருந்ததற்கு நன்றி – ப.சிதம்பரம்
ஏழைகள் என்ற வார்த்தை பட்சத்தில் இரண்டு முறை இடம் பெற்றுள்ளது; ஏழைகளை மறக்காமல் இருந்ததற்கு நன்றி என முன்னாள் அமைச்சர் பா.சிதம்பரம் பேட்டி.
நிதியமைச்சர் சீதாராமன் அவர்கள், 2022-23-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் தாக்கலில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் பட்ஜெட் தாக்கல் குறித்து டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சிறு குறு நடுத்தரத் தொழில்களை மீட்டெடுக்கும் வகையில் எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. மத்திய பட்ஜெட்டில் வரவேற்புக்குரிய எந்த அம்சங்களும் இடம் பெறவில்லை.
நாட்டில் அதிகரித்து வரும் ஊட்டச்சத்து குறைபாட்டை சரி செய்வதற்கான எந்த திட்டமும் வகுக்கப்படவில்லை. ஏழைகள் என்ற வார்த்தை பட்சத்தில் இரண்டு முறை இடம் பெற்றுள்ளது; ஏழைகளை மறக்காமல் இருந்ததற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் நிதியமைச்சர் வாசித்த முதலாளித்துவத்திற்கான பட்ஜெட்டை மக்கள் புறக்கணிப்பார்கள். மாநிலங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி வட்டியில்லா கடனுதவி என்பது வரவேற்கத் தகுந்த திட்டம். ஏழை எளிய நடுத்தர மக்களுக்கான நலத் திட்டங்களில் மானியங்கள் குறைக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.