தமிழ்நாட்டில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை மிகவும் பிரபலம் – பிரதமர் மோடி
தமிழ்நாட்டில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை மிகவும் பிரபலம் என்று பிரதமர் மோடி உரையில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு பதவியேற்ற பிறகு ” மன் கி பாத்” என்ற நிகழ்ச்சியின் மூலம் ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்நிலையில், இன்று கடைசி ஞாயிற்றுக்கிழமை “மன் கி பாத்” நிகழ்ச்சி மூலம் வானொலியில் மக்களிடம் மோடி உரையாற்றினார்.அவரது உரையில், உலக அளவிலான விளையாட்டுப் பொருள் தயாரிப்புத் தொழில், ஏழு இலட்சம் கோடி ரூபாய்களுக்கும் அதிகமான பெறுமானமுடையது. இந்த 7 இலட்சம் கோடி ரூபாய் என்ற இத்தனை பெரிய வியாபாரத்தில் இந்தியாவின் பங்கு மிகவும் குறைவானது.
விளையாட்டுப் பொருள் தயாரிப்புத் தொழில் மிகவும் பரந்து பட்டது. இப்போது அனைவரும் உள்ளூர் பொருட்களுக்காகக் குரல் கொடுக்கும் நேரம் இது. வாருங்கள், நாம் நமது சிறார்களுக்காக, புதியதொரு வகையிலான, நல்ல தரம் வாய்ந்த விளையாட்டுப் பொருட்களைத் தயாரிப்போம்:
இந்த மாத தொடக்கத்தில் இளைஞர்கள் முன்னிலையில் செயலிகளில் புதுமைகள் படைத்தல் சவால் ஒன்று வைக்கப்பட்டது. இந்த தற்சார்பு பாரதச் செயலிகளில் புதுமைகள் படைத்தல் சவாலில் நமது இளைஞர்கள் மிகவும் உற்சாகத்தோடு கலந்து கொண்டார்கள். இதற்கு 7000 பேர் பதிவு செய்தனர்.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் பண்டிகைகளை கொண்டாட வேண்டும்; குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மைகளின் மையாக இந்தியா மாற வேண்டும்.உள்நாட்டு பொம்மைகளுக்கு வளமான பாரம்பரியம் உள்ளது.தமிழ்நாட்டில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை மிகவும் பிரபலம் என்று உரையில் தெரிவித்துள்ளார்.