தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வு..!
ஸ்ரீநகரில் நேற்று நடந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஸ்ரீநகரின் புறநகரில் உள்ள ஜெவானில் உள்ள பந்தா சவுக்கில் ஒரு போலீஸ் பேருந்து மீது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். நேற்று மாலை 6 மணியளவில், ஜம்மு காஷ்மீர் ஆயுதப்படை காவல்துறையின் ஒன்பதாவது பட்டாலியனின் பணியாளர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து ஜெவானில் உள்ள காவல் பயிற்சி முகாம் அருகே வந்தது.
இதற்கிடையில், பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பேருந்து மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 14 போலீசார் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திவிட்டு பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பியோடினர். பின்னர், மருத்துவமனையில் இரண்டு போலீசார் உயிரிழந்தனர். காயமடைந்த 12 வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை ஒரு போலீசார் உயிரிழந்தார்.
இதனால், தற்போது 11 வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி பாராளுமன்ற கட்டிடத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு நேற்று அஞ்சலி செலுத்தி வந்த நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையினரால் 5 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.