மணிப்பூரில் அதிகரிக்கும் பதற்றம்! கூடுதலாக 90 ராணுவ அமைப்புகள் குவிப்பு!
மணிப்பூரில் பாதுகாப்பிற்காக கூடுதலாக 90 கம்பெனி பாதுகாப்பு படை வீரர்களை அனுப்பி உள்ளது மத்திய அரசு.
இம்பால் : கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி அந்தஸ்து கோரிய மைத்தேயி சமூகத்தினருக்கும் குக்கி பழங்குடியினருக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய இந்த மோதல் வன்முறையாக வெடித்தது. இதனால், பல இடங்களில் வீடுகள், அலுவலகங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
இந்த மோதலில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் ஒன்றரை ஆண்டுகளை கடந்த பின்னும் கூட பதற்றம் முழுமையாக ஓய்ந்தபாடில்லை. இருப்பினும், கடந்த சில மாதங்களாக மணிப்பூரில் பதற்றம் தணிந்து இருந்தது. இந்த சமயத்தில் அங்கு மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
அதற்கு காரணம், ஜிரிபம் மாவட்டத்தில் மைத்தேயி இன மக்கள் சிலர் மாயமானார்கள், அதைத் தொடர்ந்து அவர்கள் 6 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இதனால் மீண்டும் மணிப்பூரில் வன்முறை வெடிக்கத் தொடங்கியது. குறிப்பாக மணிப்பூரின் ஜிரிபாம் உள்ளிட்ட 5 மாவட்டங்கள் தொடர்ந்து வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, உள்துறை அமைச்சரான அமித்ஷா அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு கூடுதல் வீரர்களை பாதுகாப்பு காரணமாக மணிப்பூருக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கூடுதலாக 90 கம்பெனி பாதுகாப்பு படை வீரர்களை மணிப்பூருக்கு அனுப்பி இருக்கிறது.
மேலும், இது தொடர்பாக மணிப்பூர் மாநில தலைமை பதுகாப்பு ஆலோசகர் பேசுகையில், “கூடுதலாக 90 கம்பெனி பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பிற்கு வரவுள்ளனர். மேலும், இதில் குறிப்பிட்ட அளவு வீரர்கள் இம்பாலுக்கு ஏற்கனவே வருகை தந்துவிட்டனர்.
அவர்கள் அதிக பதற்றமான பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள். இன்னும் சில நாட்களில் அனைத்து பகுதிகளிலும் வீரர்கள் சென்றடைந்து விடுவார்கள். ஆயுத கிடங்கிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட சுமார் 3 ஆயிரம் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
பல படைப்பிரிவை சேர்ந்த அதிக வீரர்கள் ஒருங்கிணைந்து பாதுகாப்பு பணியை மேற்கொள்கிறார்கள். இதனால், பிரச்சினை ஏதேனும் எழுந்தால் அதை ஒருங்கிணைந்து தீர்வு காண்போம்”, என மணிப்பூர் மாநில தலைமை பதுகாப்பு ஆலோசகர் கூறி இருந்தார்.