தொண்டர் கட்டிய கோயில்;பிரதமர் மோடி சிலை திடீர் அகற்றம்…!
புனேவில் பாஜக தொண்டர் கட்டிய கோயிலில் நிறுவப்பட்ட பிரதமர் மோடி சிலை அகற்றப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் மயூர் முண்டே என்ற பாஜக தொண்டர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.இவர் பிரதமர் மோடி மீதும், பாஜக மீதும் மிகுந்த மரியாதையும் பற்றும் கொண்டவர்.
இதனால்,இவர் 1.5 லட்சம் செலவில் பிரதமர் மோடிக்கு மார்பளவு சிலை வடித்து கோயில் கட்டினார்.பிரதமரை வாழ்த்தும் வகையில் சிறப்புப் பாடலும் இங்கு எழுதப்பட்டுள்ளது.இதுகுறித்து அவர் கூறுகையில், “அயோத்தியில் வரலாற்று சிறப்புமிக்க ராமர் கோவிலை கட்டும் நிகழ்வை நிகழ்த்திய பிரதமர் மோடிக்கு தான் செலுத்தும் மரியாதையே இந்த கோவில். மேலும் பிரதமராக நரேந்திர மோடி அவர்கள் பொறுப்பேற்ற பின், பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டுள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது உள்ளிட்ட பிரச்சினைகளை பிரதமர் மோடி வெற்றிகரமாகக் கையாண்டார்”, என்று அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து,தேசியவாத காங்கிரஸ் மோடி சிலை குறித்து கடுமையாக விமர்சித்திருந்தனர்.மேலும்,தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில்,இந்தக் கோயிலில் வைக்கப்பட்டிருந்த பிரதமர் மோடி சிலை இரவோடு இரவாக அகற்றப்பட்டுள்ளது.கோயிலும் ஆரஞ்சு நிற ஷீட்களைக் கொண்டு மூடப் பட்டுள்ளது. இது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.