144 தடை:.வெளியே வந்தால் சுட்டு தள்ளுவோம்!அடங்கி இருங்க..இல்ல ராணுவத்திடம் சட்டம் ஒழுங்கை கொடுத்துவிடுவேன்-முதல்வர் சந்திரசேகரராவ் எச்சரிக்கை
கொரோனாவுக்கான லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளில்தான் இருக்க வேண்டும்; வீதிகளில் நடமாடினால் கண்டதும் சுட உத்தரவும் பிறப்பிக்கப்படும், சட்டஒழுங்கை ராணுவத்திடம் ஒப்படைக்க நேரிடும் என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் எச்சரித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தெலுங்கானாவிலும் லாக் டவுன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதும் வீதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் தொடருவதால் அம்மாநில அரசு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கூறியதாவது: தெலுங்கானாவில் இரவு முதல் காலை வரை தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த தடையை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இதை மீறினால் 24 மணிநேர தடை உத்தரவு பிறப்பிக்கவும் அரசு தயங்காது.அதே போல் அமெரிக்காவைப் போல சட்டம் ஒழுங்கு பாதுகாப்பை ராணுவத்திடம் கொடுத்து விடுவோம். பொதுமக்களில் பலர் உத்தரவை மதிக்காமல் வீதிகளில் நடமாடுவதை பார்க்க முடிகிறது. அனைத்து கடைகளும் மாலை 6 மணிக்கு கண்டிப்பாக மூடப்பட வேண்டும். ஹைதராபாத்தில் 150 கவுன்சிலர்கள் உள்ளனர். ஆனால் அதிகாரிகளும் காவல்துறையினரும் தான் கொரோனா தடுப்பு பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இந்த கவுன்சிலர்கள் எங்கே போனார்கள் என்பதுதான் தெரியவில்லை. வைரஸ் பாதித்து வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டவர்கள் தங்களது பாஸ்போர்ட்டை ஒப்படைத்துவிட வேண்டும். 14 நாட்கள் கண்காணிப்பில் அவர்கள் இருந்துதான் ஆக வேண்டும்.தடை சட்டங்களை மீறுகிறவர்களுக்கு சில நாடுகளில் சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருக்க வேண்டுமா? சிறைக்கு போக வேண்டுமா? என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும். இனியும் அரசு கூறுவதை பொருட்படுத்தமால் சட்டங்களை மீறி வீதிகளில் பொதுமக்கள் நடமாடினால் கண்டதும் சுட உத்தரவும் பிறப்பிக்கவும் நேரிடும். என்று முதல்வர் சந்திரசேகர ராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.