தெலுங்கு திரையுலகினருக்கு தெலுங்கானா முதல்வர் அதிரடி சலுகை!
கொரோனா ஊரடங்கால் தெலுங்கு திரையுலகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னணி நடிகர்களின் கோரிக்கைகளை ஏற்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்கள் பல்வேறு சலுகைகளை அறிவித்து உள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் தெலுங்கு திரை உலகம் தான் அதிக அளவிலான தியேட்டர்களுடன் பல கோடிக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் அதிக வசூலில் படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதிலும் அனைத்து துறைகளும் முடக்கப்பட்ட நிலையில் சினிமா துறையும் முடக்கப்பட்டது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் தியேட்டர்கள் திறக்கப்படாமல் இருந்தது. தற்பொழுது உடனடியாக தியேட்டரை திறந்து கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது மேலும் சமீபத்தில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்களை சீனியர் நடிகர்களான சிரஞ்சீவி மற்றும் நாகார்ஜுனா ஆகியோர் சந்தித்து பல கோரிக்கைகளை வைத்து இருந்த நிலையில், முதல்வர் தெலுங்கு திரை உலகின் பல்வேறு சலுகைகளையும் வழங்கியுள்ளார்.
அதாவது கட்டிய ஜிஎஸ்டியை மீண்டும் வசூலித்தல், தியேட்டர் காட்சிகளை அதிகரித்தல் சினிமா, தியேட்டர் டிக்கெட் கட்டணம் 50 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை தயாரிப்பாளர்களின் விருப்பத்திற்கேற்ப நிர்ணயித்துக் கொள்ளுதல், ஸ்டூடியோ கட்ட நிலம், மின்சார கட்டணத்தில் சலுகைகள், சினிமா தொழிலாளர்களுக்கு சுகாதார அட்டைகள் என பல்வேறு சலுகைகளை அறிவித்து உள்ளார். இந்நிலையில் முதல்வரின் இந்த சலுகைகளுக்கு தெலுங்கு திரையுலகில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதுடன் தெலுங்கு திரையுலகினர் தெலுங்கானா முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.