வாழைப்பழம் விற்ற ஆசிரியருக்கு ரூ. 86,300 கொடுத்த முன்னாள் மாணவர்கள் .!
ஆந்திர மாநிலத்தில் வாழைப்பழம் விற்ற ஆசிரியருக்கு 150-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் ரூ. 86,300 கொடுத்து உதவினார்.
ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள நாராயணா பள்ளியில் தெலுங்கு ஆசிரியராக வெங்கட சுப்பையா வேலை செய்து வந்தார். கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் பள்ளிகளுக்கு விடுமுறை கொடுக்கப்பட்டது.
இதனால், வெங்கடசுப்பையா ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வந்துள்ளார். சில நாட்களுக்கு முன் வெங்கட சுப்பையா மற்றும் அவருடன் வேலை செய்து வந்த 5 பேரையும் காணொலி மூலம் அழைத்த பள்ளி நிர்வாகம், உங்கள் வேலையில் திருப்திகரமாக இல்லை எனக்கூறி வேலையை விட்டு நீக்கியது.
பள்ளி நிர்வாகம் மாணவர்களுக்கு பாடங்களை எடுப்பதை விட பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதே பெரும் பணியாக எங்களுக்கு கொடுக்கப்பட்டது. புதிய மாணவர்களை பள்ளியில் சேர்க்க நாங்கள் முயற்சி எடுக்காததால் பள்ளி நிர்வாகம் எங்களை வேலையை விட்டு நீக்கப்பட்டதாக வெங்கட சுப்பையா கூறினார்.
இந்நிலையில், தான் பள்ளியில் வேலை இழந்ததால் வேறு வழி இல்லாமல் வெங்கடசுப்பையா வாழைப்பழம் விற்கத் தொடங்கிவிட்டார். இவரின் நிலைமையை அறிந்த அவரிடம் படித்த 150-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் ரூ. 86,300 -ஐ வழங்கி உதவி செய்தனர்.