மாணவியின் முகத்தில் வலுக்கட்டாயமாக கேக் பூசிய ஆசிரியர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது..!
11 ஆம் வகுப்பு மாணவி முகத்தில் வலுக்கட்டாயமாக கேக் பூசிய 56 வயது ஆசிரியர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பரேலி எனும் பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் பணியாற்றி வரக்கூடிய 56 வயதுடைய ஆசிரியர் ஒருவர், பயிற்சி மையத்தில் வைத்து ஆசிரியர் தினத்தன்று கேக் வெட்டிய பொழுது. அருகில் இருந்த 11ஆம் வகுப்பு படிக்க கூடிய மாணவியின் முகத்தில் வலுக்கட்டாயமாக கேக்கை பூசியுள்ளார். அந்த பெண் தன்னை விட்டு விடுமாறு கூறிய போதும் அதை கண்டுகொள்ளாமல், உங்களை யார் வந்து காப்பாற்றுவார்கள் என்று கூறி மாணவியை இழுத்துப் பிடித்து அவரது முகத்தில் கேக்கை பூசியுள்ளார்.
இந்நிலையில், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரது கண்டனத்தையும் பெற்றது. இதனையடுத்து பள்ளி நிர்வாகம் அந்த ஆசிரியரை சஸ்பெண்ட் செய்தது. இருப்பினும் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில், 56 வயதுடைய ஆசிரியர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். தற்பொழுது விசாரணைக்காக அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.