காங்கிரஸ், பாஜக அல்லாத தேசிய அளவிலான சந்திரபாபு நாயுடு தலைமையில் 3வது அணி உருவாக வாய்ப்பு
தெலுங்கு தேசம் கட்சி தலைமையில், 3வது அணி உருவாக உள்ளதாகவும், அந்த அணியின் முதல் கூட்டம் வரும் ஏப்ரல் 7ம் தேதி நடைபெறும் என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ஆண்ட கட்சிகளான காங்கிரஸ், பாஜக அல்லாத தேசிய அளவிலான 3வது அணி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில் உருவாகும் வாய்ப்பு இருப்பதாகவும், இது தொடர்பாக அவர் பல கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தற்போது வெளியாகி வந்தன. அதற்கேற்றார் போல ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கவேண்டும் என்கிற கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டதாக கூறி, தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து, தெலுங்கு தேசம் விலகியது.
தற்போது மத்திய அரசு மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டுவர ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து, தெலுங்கு தேசம் கட்சியும் கோரிக்கை வைத்துள்ளது. இது தொடர்பாக சபாநாயகரிடம் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட சூழலில் தான் தேசிய அளவில் 3வது அணியை அமைக்க சந்திரபாபு நாயுடு திட்டமிடுவதாகவும், இது தொடர்பாக 11 கட்சிகளிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் படி, சரத் பவார், மம்தா பானர்ஜி, மாயாவதி, ஸ்டாலின், அகிலேஷ் யாதவ் , ஃபரூக் அப்துல்லா, கேஜ்ரிவால், நவீன் பட்நாயக், ஓம் பிரகாஷ் சவுதாலா), அசோம் கணபரிஷத் ஆகியோருடன் அவர் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாகவும், இந்த அணியின் முதல் மாநாடு வரும் ஏப்ரல் 7ம் தேதி அமராவதியில் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.