புறக்கணிக்கப்பட்ட தமிழ்நாடு.? போர்க்கொடி தூக்கிய தமிழக எம்.பிக்கள்.!
டெல்லி: நேற்று அறிவிக்கப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு திட்டங்கள் அறிவிக்கப்படாததை எதிர்த்து தமிழக எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நேற்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட் 2024-ஐ தாக்கல் செய்தார். அதில் பொதுவான அறிவிப்புகளை தவிர்த்து, NDA கூட்டணி கட்சிகளின், பீகார் (நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம்) மற்றும் ஆந்திரா (சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம்) மாநிலங்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
இதுகுறித்து பல்வேறு எதிர்க்கட்சியினர் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, டெல்லி போன்ற பல்வேறு மாநிலங்களுக்கு சிறப்பு திட்டங்கள் எதுவும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை.
இன்று நாடாளுமன்றம் சென்ற தமிழக எம்பிக்கள், மற்றும் புதுச்சேரி எம்பி என பல நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுவிட்டது என கூறி, தமிழகத்திற்கு மத்திய அரசு போதிய நிதி வழங்கவில்லை என்றும் பதாகைகைகளை ஏந்தி நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். மேலும், இன்றைய நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளை புறக்கணித்தும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.