“தாலிபான்கள் ஸ்டைலில் தாக்க வேண்டும்” – பாஜக எம்எல்ஏ பேச்சால் சர்ச்சை..!

திரிபுரா பாஜக எம்எல்ஏ அருண் சந்திர பௌமிக்,திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மீது “தலிபான்கள் பாணியில் தாக்குதல்” நடத்துமாறு தனது ஆதரவாளர்களிடம் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும்,பாஜகவிற்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல் நீடித்து வருகிறது.இதற்கிடையில்,முதல்வர் மம்தா, பாஜகவினர் ஆளும் திரிபுராவில் ஆட்சியைப் பிடிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில்,மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் பிரதிமா பவுமிக்கிற்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசிய திரிபுரா மாநில பாஜக எம்.எல்.ஏ அருண் சந்திர பவுமிக் , “மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட டிஎம்சி தலைவர்கள் திரிபுராவில் பிப்லாப் தேப் தலைமையிலான பாஜக அரசை மேற்கு நாடுகளின் தூண்டுதலால் சேதப்படுத்த முயற்சிக்கின்றனர்.
எனவே,அவர்கள் இங்கு விமான நிலையத்தில் இறங்கினால்,தலிபான்கள் பாணியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை தாக்குமாறு உங்கள் அனைவரிடமும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.ஒவ்வொரு துளி இரத்தத்துடனும் நமது அரசாங்கத்தை நாம் பாதுகாப்போம்,”என்று கூறினார்.
இது பெரும் சர்ச்சையையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால்,எம்எல்ஏ அருண் சந்திர பவுமிக்கை கைது செய்ய வேண்டுமென திரிணாமூல் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.இதற்கிடையே திரிபுரா பாஜக செய்தித்தொடர்பாளர், அருண் சந்திர பவுமிக் தெரிவித்தது அவரது சொந்த கருத்து எனவும், கட்சி அதற்குப் பொறுப்பேற்காது எனவும் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல்,பாஜக எம்எல்ஏ பௌமிக் கருத்துக்களைக் கண்டித்து, திரிணாமுல் இளைஞரணி தலைவரும் முன்னாள் எம்பியுமான ரிதாபிரதா பானர்ஜி கூறியதாவது, “திரிணாமுல் தலைவர்களைத் தாக்க பாஜக ஒரு “தைங்கரே பாஹினி” (குண்டர் படை) உருவாக்கியதாகவும்,அவர்களால் திரிபுராவில் டிஎம்சி பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜியின் கார் தாக்குதலுக்கு உள்ளானதாகவும் கூறினார்.
மேலும்,”உலகம் முழுவதும் தலிபான்களை விமர்சிக்கும் நேரத்தில், எம்எல்ஏ, அரசியலமைப்பின் பெயரால் சத்தியப்பிரமாணம் செய்து, மேற்கு வங்கத்தில் இருந்து வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை தலிபான்கள் பாணியில் தாக்குமாறு அவர் கேட்டது கண்டிக்கத்தக்கது”,என்று கூறினார்.