“தாஜ்மஹால் நிலம் எங்கள் அரச குடும்பத்திற்கு சொந்தமானது” – பாஜக எம்பி தியா குமாரி திடுக் தகவல்!
இந்தியாவின் ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹால் முகலாய பேரரசர் ஷாஜகானால் கடந்த 1632-இல் கட்டப்பட்ட நிலையில்,உலக அதியங்களில் ஒன்றாக சிறந்து விளங்குகிறது.
இந்நிலையில்,தாஜ்மஹால் கட்டடம் கட்டப்பட்ட நிலம் முதலில் ஜெய்ப்பூர் அரச குடும்பத்துக்கு சொந்தமானது என்றும், அதன்பின்னர்,இந்த நிலம் முகலாயப் பேரரசர் ஷாஜஹானால் கையகப்படுத்தப்பட்டது என்றும்,ராஜஸ்தானின் பாரதிய ஜனதா (பாஜக) நாடாளுமன்ற உறுப்பினர் தியா குமாரி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்,இது தொடர்பாக முன்னாள் ஜெய்ப்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த எம்பி குமாரி கூறுகையில்,”இந்த நிலம் ஜெய்ப்பூர் குடும்பத்துக்குச் சொந்தமானது என்பதற்கான ஆவணங்கள் எங்களிடம் உள்ளன.அதை ஷாஜகான் கையகப்படுத்தினார்.
ஆனால்,அப்போது நீதிமன்றம் இல்லாததால்,அந்த நேரத்தில் மேல்முறையீடு செய்திருக்க முடியாது.பதிவேடுகளை ஆய்வு செய்த பிறகே விஷயங்கள் தெளிவாகும்.எனினும்,அப்போதைய சூழ்நிலைகள் என்னவென்று எனக்குத் தெரியவில்லை,ஆனால் எங்களிடம் உள்ள ஏதேனும் ஆவணங்களை வழங்குமாறு நீதிமன்றம் கேட்டால்,நாங்கள் வழங்குவோம்”,என்று கூறியுள்ளார்.
மேலும்,”தாஜ்மஹாலில் ஏன் பல அறைகள் பூட்டப்பட்டுள்ளன என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.பல அறைகள் அங்கு சீல் வைக்கப்பட்டுள்ளன,கதவுகளுக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பதை ஆய்வு செய்ய வேண்டும்”,என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனையடுத்து,இது தொடர்பாக முன்னாள் கேபினட் அமைச்சரும்,பாஜக பிரமுகருமான சுப்பிரமணிய சாமி கூறுகையில்,”ஆம்,அது அவரது மூதாதையரான ராஜாவிடமிருந்து ஷாஜஹானால் பறிக்கப்பட்ட நிலம்.இதில் அவருக்கு உரிமை உண்டு.எனவே தியா குமாரிக்கு அந்த நிலம் கிடைத்தவுடன், தாஜ்மஹால் சேதமடையாமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில்,அவர் இடிக்கப்பட்ட சிவன் கோயிலை அதே பகுதியில் மீண்டும் கட்டுவார் என்று நம்புகிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.
Yes she does have the right since it was grabbed by Shahjahan from her ancestor Raja. Hence Diya Kumari has a claim. But once she gets I hope she will re build the demolished Shiva Temple in the same area as the Taj Mahal ensuring Taj is not damaged,
— Subramanian Swamy (@Swamy39) May 11, 2022
இதனிடையே,உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி மாவட்டத்தின் பாஜக ஊடகப் பொறுப்பாளர் ரஜ்னீஷ் சிங்,“தாஜ்மஹாலில் சுமார் 20 அறைகள் பூட்டப்பட்டுள்ளன,யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஏனெனில்,இந்த அறைகளில்,இந்து கடவுள்களின் சிலைகள் மற்றும் புனித நூல்கள் இருப்பதாக நம்பப்படுகிறது,”என்று கூறி தாஜ்மஹாலுக்குள் 20 அறைகளை திறக்குமாறு இந்திய தொல்லியல் துறைக்கு (ஏஎஸ்ஐ) உத்தரவிடக் கோரி மே 4 ஆம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு விசாரணையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.