இந்தியாவுக்கு 150 ஆக்சிஜன் செறிவூட்டிகளை அனுப்பும் தைவான்!
தைவான் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு 150 ஆக்சிஜன் செறிவூட்டிகள் அனுப்பப்பட்டு உள்ளதாக வெளியுறவுத்துறை மந்திரி ஜோசப் வு அவர்கள் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே செல்கிறது. மேலும் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் லட்சக் கணக்கில் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் கொரோனாவால் உயிரிழப்புகள் ஒரு புறமிருக்க நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருத்துவ வசதிகள் இன்றி மருத்துவமனை நிர்வாகம் திணறி வருகிறது. நாடு முழுவதுமே ஆக்சிஜன் பற்றாக்குறை மிக அதிக அளவில் உள்ளது.
இந்நிலையில்,தைவானில் இருந்து 150 ஆக்சிஜன் செறிவூட்டிகள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள வெளியுறவு மந்திரி ஜோசப் வு அவர்கள், தற்பொழுது உள்ள நெருக்கடியை தவிர்ப்பதற்கு தேவையான 150 ஆக்சிஜன் செறிவூட்டிகள் இந்த வார இறுதிக்குள் இந்தியாவை வந்தடையும் எனவும் மேலும் இந்தியா கேட்ட உதவிகளை வழங்குவதற்கு தைவான் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.