தொங்கு பாலம் விபத்து – நீதிமன்றத்தில் சரணடைந்த முக்கிய குற்றவாளி!
மோர்பி பாலத்தில் சீரமைப்பு பணி மேற்கொண்ட ஒரேவா நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ஜெய்சுக் படேல் நீதிமன்றத்தில் சரண்.
குஜராத் மாநிலம் மோர்பியில் தொங்கும் பாலம் விபத்துக்குள்ளான சம்பவத்தில் முக்கிய குற்றவாளி காந்திநகர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். பாலத்தில் சீரமைப்பு பணி மேற்கொண்ட ஒரேவா நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ஜெய்சுக் படேல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
143 ஆண்டுகள் பழமையான மோர்பி தொங்கும் பாலம் சீரமைக்கப்பட்டு பின் விபத்துக்குள்ளானதில் 135 பேர் உயிரிழந்தனர். குஜராத் மாநிலம் மோர்பி நகரில் உள்ள தொங்கு பாலத்தில் கடந்த ஆண்டு அக்.30ம் தேதி ஏராளமானோர் மக்கள் திரண்டதால், பாரம் தாங்காமல் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில், 135 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. மேலும், மோர்பி தொங்கு பால விபத்தில் முக்கிய குற்றவாளி ஒரேவா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெயசுக் படேல் தான் என்பது போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் 1,262 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று காந்திநகர் நீதிமன்றத்தில் முக்கிய குற்றவாளி ஜெய்சுக் படேல் சரணடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.