பிரிக்க முடியாத சுஷ்மாவும் ட்விட்டரும் !
நேற்று இரவு உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கூட தனது உடல்நலனை காரணம் காட்டியே போட்டியிடாமல் இருந்தார்.ஆனால் அவர் 2014 ஆம் ஆண்டு வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற முதல் 2019 ஆம் ஆண்டு பதவிக்காலம் முடியும் வரை பல்வேறு உதவிகளை செய்துள்ளார்.அதிலும் குறிப்பாக தனது ட்விட்டர் பக்கம் மூலமாக மக்கள் பிரச்சினைகள் பலவற்றிற்கு உதவிகளை செய்துள்ளார். இரவானாலும் சரி பகலானாலும் சரி சுஷ்மாவின் ட்விட்டர் பக்கத்தில் உதவி என்று கேட்டல் பதில் உடனே வரும்.அது மட்டும் அல்லாமல் உடனே அதற்கான உதவியையும் செய்துவிடுவார். அந்த அளவிற்கு தனது ட்விட்டர் பக்கத்தை அவர் புத்துயிரோடு வைத்திருந்தார்.
அந்த வகையில் தான் ட்விட்டரில் ஒருவர் உதவி கேட்க அதற்கு நகைச்சுவையாக சுஷ்மா பதில் அளித்துள்ளார்.அந்த கேட்ட கேள்வி,நான் செவ்வாய் கிரகத்தில் மாட்டிக்கொண்டிருக்கிறேன்,என்னை மீட்க மங்கள்யான் விண்கலத்தை அனுப்பும்படி ட்வீட் செய்தார்.இதற்கு சுஷ்மா அளித்த பதிலில்,செவ்வாய் கிரகத்தில் உள்ள இந்திய தூதரகம் உங்களுக்கு கண்டிப்பாக உதவி செய்யும் ,கவலை வேண்டாம் என்றும் பதிவிட்டிருந்தார்.
அது மட்டும் அல்லாமல் தென் ஆப்பிரிக்காவில் மாட்டிக்கொண்ட இந்திய பெண்,ஈரானில் சிக்கிய இந்தியர்கள்,ஏமனில் சிக்கிய இந்தியர்கள் என பலரை மீட்க உதவி செய்தவர்தான் சுஷ்மா.
நேற்று காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு நாடாளுமன்ற இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டார் .அவரது பதிவில்,‘ என் வாழ்நாள் கனவு தற்போது நிறைவேறியுள்ளது. ஆனால் அந்த ட்வீட் பதிவிட்ட சில மணி நேரத்திற்குள்ளாகவே இயற்கை எய்தினார் சுஷ்மா சுவராஜ்.