“பாலியல் புகார்களை வைத்து பணம் சம்பாதிக்காதீர்”.. பத்திரிக்கையாளர்களை கடிந்த சுரேஷ் கோபி.!
திருச்சூர் : மலையாள திரையுலகில் அதிகரித்து வரும் ‘மீடூ’ குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, சுரேஷ் கோபி தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
மலையாள திரையுலகில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் இருப்பதாக ஹேமா குழு அளித்த அறிக்கையை அடுத்து, மலையாள திரைப்பட நடிகர் சங்க தலைவர் மோகன்லால் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் கூண்டோடு இன்று ராஜினாமா செய்துள்ளது.
இது குறித்து விசாரணை நடத்தவும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வேண்டி முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு மும்மூரம் காட்டி வருகிறது. அதே நேரம் இந்த விஷயத்தில் கேரள அரசு மெத்தனம் காட்டுவதாக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து திருச்சூரில் பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த நடிகரும், அரசியல்வாதியுமான சுரேஷ் கோபி, ” பாலியல் புகார்கள் அனைத்தும் குற்றச்சாட்டு என்ற நிலையிலேயே உள்ளன. இருக்கும் இடத்தை பொறுத்து கேள்விகளை கேளுங்கள். ஊடகங்கள் சொந்த லாபத்திற்காக மக்களை ஒருவரையொருவர் சண்டையிட வைப்பது மட்டுமல்லாமல், பொதுமக்களின் கருத்தையும் தவறாக வழிநடத்துகிறீர்கள்.
தற்பொழுது எழுந்துள்ள புகார்கள், குற்றச்சாட்டுகளின் வடிவத்திலே உள்ளது. நீங்கள் மக்களுக்கு என்ன சொல்கிறீர்கள்? நீங்கள் நீதிமன்றமா? என்று கட்டத்துடன் பேசிய கோ, “பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து நீதிமன்றம் முடிவெடுக்கும், நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்? சினிமா என்ற உலகை நிலை தடுமாற வைக்கிறீர்கள்.
இவ்வாறு மலையாள திரையுலகில் தொடரும் பாலியல் புகார்கள் குறித்த கேள்வியால் சுரேஷ்கோபி ஆத்திரமாக பதிலளித்தோடு, நீங்கள் ஆடுகளை சண்டையிட்டு அதன் இரத்தத்தை குடிப்பது போல் இருக்கிறீர்கள். ஊடகங்கள் பொதுமக்களின் மனநிலையை தவறாக வழிநடத்துகின்றன” என்று பதில் கூறினார்.
சுரேஷ் கோபி மலையாள திரையுலகில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றவர், மம்முட்டி மற்றும் மோகன்லாலுக்குப் பிறகு கடைசி சூப்பர் ஸ்டார் ஆவார். சமீபத்தில், நடைபெற்ற பாராளும்னற தேர்தலில் திருச்சூர் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.