சூரத் நீதிமன்றம் தீர்ப்பு.. 2 ஆண்டு சிறைத்தண்டனை – ராகுல் காந்தி இன்று மேல்முறையீடு!

Default Image

தீர்ப்பு வந்து 11 நாட்கள் ஆன நிலையில், தண்டனைத் தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி இன்று மேல்முறையீடு செய்கிறார்.

அவதூறு பேச்சு:

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது தீவிர பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக மாநிலம் கோலாரில் கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பேச்சு சர்ச்சையானது. அதாவது, ஊழல் செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பி ஓடிய நிரவ் மோடி, லலித் மோடி ஆகியோருடன் பிரதமர் மோடியையும் சேர்த்து அவதூறாக பேசியது தொடர்பான வீடியோ அப்போது வெளியாகி வைரலானது.

சிறைத் தண்டனை விதிப்பு:

ராகுல் காந்தியின் அவதூறு பேச்சுக்கு எதிராக சூரத் மாவட்ட தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக 4 ஆண்டுகளுக்கு பின் கடந்த மாதம் 23-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, ராகுல் காந்திக்கு  2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து மாஜிஸ்திரேட்டு எச்.எச்.வர்மா அதிரடியாக தீர்ப்பு வழங்கியிருந்தார்.

எம்.பி. பதவி பறிப்பு:

இந்த தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்ய எதுவாக ஜாமீனும் வழங்கப்பட்டு, தண்டனையை ஒரு மாத காலத்துக்கு நிறுத்தியும் வைத்தனர். சூரத் நீதிமன்றம் தீர்ப்பை தொடர்ந்து, அடுத்த நாளே ராகுல் காந்தியின் வயநாடு தொகுதி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த 2 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி உடனடியாக மேல்முறையீடு செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தாமதமாகி வந்தது.

மேல்முறையீடு:

இந்த நிலையில், அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி இன்று மேல்முறையீடு செய்கிறார். தீர்ப்பு வந்து 11 நாட்கள் ஆன நிலையில், தண்டனைத் தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி இன்று (திங்கட்கிழமை) சூரத் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் நேரில் மேல்முறையீடு செய்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதற்காக, இன்று மாலை சூரத் செல்கிறார் ராகுல் காந்தி.

எதிர்பார்ப்பு:

இதனிடையே, ராகுல் காந்தி மீதான தண்டனைக்கும், தண்டனை தீர்ப்புக்கும் தடை கொடுக்காவிட்டால், அவர் 8 ஆண்டு காலத்துக்கு தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும். ஒரு வேளை தீர்ப்புக்கு தடை விதிக்கப்பட்டால் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பும் நிறுத்தப்படும், மீண்டும் மக்களவைக்குச் செல்ல முடியும். எனவே, ராகுல் காந்தியின் மேல்முறையீடு மனு மீதான தீர்ப்பு எவ்வாறு வரும் என அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்க்கபடுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்