பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு.! விசாரணைக்குத் தாமாக முன்வந்த உச்சநீதிமன்றம்.!
டெல்லி : கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு தொடர்பாக இன்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணை நடைபெற உள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி கர் மருத்துவமனை கல்லூரி வளாகத்தில் உள்ள ஓர் கருத்தரங்கில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
முதலில், கொல்கத்தா காவல்துறையினர், ஒருவரை கைது செய்து இந்த வழக்கின் விசாரணையை மேற்கொண்டு வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதியன்று அம்மாநில உயர்நீதிமன்ற உத்தரவின் பெயரில் இவ்வழக்கு விசாரணையானது சிபிஐ வசம் சென்றது.
நாடு முழுதுவம் பெரும் அதிர்வலையையும், பல்வேறு போராட்டங்களையும் எதிர்கொண்ட பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில், இன்று காலை 10.30 மணியளவில் பயிற்சி மருத்துவர் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை தொடங்க உள்ளது.
இந்நிலையில், இந்திய மருத்துவ ஆலோசகர்கள் சங்கமும் (FAMCI), ஃபெடரேஷன் ஆஃப் ரெசிடென்ட் மருத்துவர்கள் சங்கமும் (FORDA) தாமாக முன்வந்து தங்கள் தரப்பு கோரிக்கைகளைக் கேட்க வேண்டும் என இடையீட்டு மனுவைத் (ரிட் மனு) தாக்கல் செய்துள்ளது.
மருத்துவ சங்கங்கள் தங்கள் இடையீட்டு மனுவில், “மருத்துவமனைகளில் பணியாற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் மருத்துவமனைகளில் சில சமயம் நிலவும் அசாதாரண சூழல் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக மத்திய அரசு ஓர் சட்ட அமைப்பை நிறுவ வேண்டும். மேலும், மருத்துவரின் பாதுகாப்பிற்காக மாநில வாரியாக நிலவும் சட்டங்களில் உள்ள வேறுபாடுகளைக் களைய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.” என இந்த இடையீட்டு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் படுகொலை சம்பவம் அதன் பிறகான போராட்டங்களை அடுத்து, மத்திய சுகாதாரத்துறை ஓர் முக்கிய அறிக்கையை வெளியிட்டது. அதில், மருத்துவமனை ஊழியர்களுக்கு ஏதேனும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள் நிகழ்ந்தால் , சம்பவம் தொடர்பாக அடுத்த 6 மணிநேரத்திற்குள் முதல் தகவல் அறிக்கை பதியப்பட வேண்டும். அப்படிப் பதியப்படவில்லை என்றால் அதற்கு மருத்துவமனை நிர்வாகமே பொறுப்பு எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.