பாபா ராம்தேவ் அளித்த மனுவை அடுத்த வாரம் விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு…!
இந்திய மருத்துவ சங்கங்கள் (ஐ.எம்.ஏ) தாக்கல் செய்த எஃப்.ஐ.ஆர்களில் இருந்து பாதுகாப்பு வேண்டும் என்று கோரிய பாபா ராம்தேவ் மனு மீதான விசாரணையை அடுத்த வாரத்திற்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
பதஞ்சலி நிறுவனத்தின் உரிமையாளர் பாபா ராம்தேவ்,சமீபத்தில் நவீன மருத்துவ முறைகளை (அலோபதி) முட்டாள்தனமான அறிவியல் என்றும், கொரோனா சிகிச்சை முறையில் ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்தவர்களைவிட, அலோபதி மருந்துகளால்தான் அதிகம் பேர் இறந்தனர் எனக் கூறினார்.
பாபா ராம்தேவ் கூறிய கருத்துக்கு இந்திய மருத்துவர்கள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்தனர்.இதற்கு,பாபா ராம்தேவ் சார்பில் ஒரு அறிக்கை ஓன்று வெளியிடப்பட்டது.
அதில் தனது கருத்தை திரும்பப் பெறுவதாகவும், மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து, இந்திய மருத்துவர் சங்கத்தின் உத்தரகாண்ட் மாநில கிளை “நவீன மருத்துவத்தை தவறாகப் பேசிய பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் 15 நாட்களில் மன்னிப்பு கேட்க வேண்டும்.இல்லாவிட்டால் ரூ.1000 கோடி இழப்பீடு தரவேண்டும் என நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதனையடுத்து,பாபா ராம்தேவ் அவசர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு அலோபதி தான் சிறந்தது என்பதில் சந்தேகமில்லை என தெரிவித்தார்.
இதனையடுத்து,அலோபதியின் செயல்திறன் குறித்து கூறிய கருத்துக்கள் தொடர்பாக இந்திய மருத்துவ சங்கங்கள் (ஐ.எம்.ஏ) பாட்னா மற்றும் ராய்ப்பூர் கிளைகளில் தாக்கல் செய்த எஃப்.ஐ.ஆர்களின் கட்டாய நடவடிக்கைகளில் இருந்து பாதுகாப்பு வேண்டும் என்றும்,அந்த வழக்குகளை டெல்லிக்கு மாற்றவும் கோரி,ராம்தேவ் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்நிலையில்,இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா மற்றும் ஹிருஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது,இந்திய மருத்துவ கவுன்சில் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர்,பாபா ராம்தேவ் பேச்சு குறித்த விவரங்களை தாக்கல் செய்ய தயார் என்று கூறினார் .பின்னர்,ராம்தேவ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில்,இந்த வழக்கிற்கும்,இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார்.
இதனையடுத்து,இரு தரப்பு வாதங்களுக்கு பின்னர் நீதிபதிகள் ,பாபா ராம்தேவ் பேச்சுக்கள் அடங்கிய வீடியோ,ஆவணங்களை பார்க்க இருப்பதாகவும், அதனால்,மனு மீதான விசாரணையை அடுத்த வாரம் 12 -ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும் தெரிவித்தனர்.