Sanatana Dharma : சனாதன எதிர்ப்பு.. உதயநிதிக்கு எதிரான அவசர வழக்கு.! உச்சநீதிமன்றம் மறுப்பு.!
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாடு நிகழ்ச்சியில் பேசுகையில், சனாதனம் என்பது டெங்கு, கொரோனா போல ஒழிக்கப்பட வேண்டும் என பேசியிருந்தார். இந்த கருத்து இந்திய அரசியலில் தற்போது வரை பேசு பொருளாகி வருகிறது.
பாஜகவினர், வலதுசாரி அமைப்புகள் , மத்திய அமைச்சர்கள் ஆரம்பித்து பிரதமர் மோடி வரையில் சனாதனத்தை எதிர்த்து பேசுபவர்களுக்கு எதிராக தங்கள் கருத்துக்களை பேசியுள்ளனர். சனாதனத்தை எதிர்த்து பேசுபவர்கள் நாக்கை அறுக்க வேண்டும் என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்த்தில் வலதுசாரி ஆதரவாளர்கள் வழக்கு தொடர்ந்து இருந்தனர். சனாதனம் பற்றி பேசி இந்தியாவில் உள்ள பெரும்பாலான இந்துக்கள் மனதை பலர் புண்படுத்தி பேசி வருகின்றனர் என கூறி இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
இந்த வழக்கு பட்டியலிடப்படாமல் இருந்த நிலையில், இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முன் இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால், அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றால் அதனை முறைப்படி பதிவாளர் மூலம் செயல்படுத்தவும் என கூறி தற்போது அவசர வழக்காக விசாரிக்க முடியாது என கூறி தலைமை நீதிபதி மறுப்பு தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து திங்களன்று மீண்டும் இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்துக்கொள்ள கூறி தலைமை நீதிபதி கூறியதன் பெயரில் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் முறையிட உள்ளனர்.