பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக்கோரிய வைகோவின் மனு !விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக்கோரி வைகோ சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.மேலும் காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக்கோரி வைகோ சார்பில் ஆட்கொணர்வு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவில் தங்களது கட்சி சார்பில் மாநாடு நடைபெறவுள்ளது.அந்த மாநாட்டில் பங்கேற்க பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறோம்.மேலும் பரூக் அப்துல்லாவை சந்தித்து அவருக்கும் அழைப்பு விடுக்க தீர்மானித்தோம்.ஆனால் அவரை எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை,எனவே அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டது.ஆனால் அந்த மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.மனுவை எப்போது விசாரிப்பது என்பதை தலைமை நீதிபதி முடிவு செய்வார் என்றும் நீதிபதி ரமணா அமர்வு அறிவித்துவிட்டது.