9 வருடங்களாக நடந்த 2.77 ஏக்கர் ராமஜென்ம பூமி வழக்கு: அடுத்த கட்ட முடிவை அறிவித்தது உச்ச நீதிமன்றம்
- கடந்த 2010ஆம் ஆண்டு முதல் நடந்து வந்த அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கு தற்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.
- உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள 2.77 ஏக்கர் ராமஜன்மபூமி, பாபர் மசூதி நிலம் யாருக்கும் சொந்தமானது என்பது தான் இந்த வழக்கு.
அயோத்தியில் உள்ள பாபர் மசூதி மற்றும் ராமஜன்மபூமியின் 2.77 ஏக்கர் நிலம் மனுதாரர்கள் சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பேரும் பிரித்துக் கொள்ளும்படி கடந்த 2010ஆம் ஆண்டு அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பினை எதிர்த்து மூவரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர் அதனைத் தாண்டி 14 மேல்முறையீட்டு மனுக்களும் இந்த வழக்கின் மீது தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது . ஒரு முடிவு எட்டப்படாததால் அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது.
பின்னர் கடந்த ஒரு வாரமாக நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இதனை விசாரித்து வந்தது. மேலும் ஒரு குழு அல்லது மத்தியஸ்தரை வைத்து இந்த பிரச்சனை தீர்க்க முடியுமா என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்த அறிவுரையை இந்து அமைப்புகள் எதிர்க்க முஸ்லிம் அமைப்புகள் ஏற்றுக் கொண்டது.
பின்னர் பல தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் உச்சநீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி எப்.எம் கலிபுல்லா தலைமையிலான 3 பேர் கொண்ட மத்தியஸ்தர் குழுவை நியமித்துள்ளது. இந்த குழுவில் வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மற்றும் வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.