நோட்டாவுக்கு அதிக வாக்குகள் விழுந்தால் மறுதேர்தல்.. தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!
NOTA votes: நோட்டா வாக்குகள் அதிகம் பதிவாகும் இடங்களில் அந்த தேர்தலை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு.
ஒரு நாட்டின் குடிமகன் வாக்களிப்பது என்பது ஒரு முக்கிய ஜனநாயக கடமையாகும். ஆனால் இதுவரை நடந்த தேர்தலில் 100 சதவீதம் வாக்குகள் பதிவானதாக சரித்திரம் இல்லை. இதனால் வாக்களிக்க தகுதியுடையவர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே அரசியல் கட்சியை சாராதவர்கள், அரசியல் மீதும் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் மீதும் நம்பிக்கை இல்லாதவர்கள், பிடிக்காதவர்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று கூறும் வகையில் நோட்டாவுக்கு வாக்களிப்பது என்பது சமீப காலமாக அதிகரித்து கொண்டே வருகிறது.
யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்ற (None of the Above) NOTA என்பது உச்சநீதிமன்றம் அறிவுறுத்தலின்படி, கடந்த 2013ம் ஆண்டு முதல் முறையாக மின்னனு இயந்திரத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அதிலிருந்து நோட்டாவுக்கு வாக்களிப்போர் எண்ணிக்கை அதிகரித்து தான் வருகிறது. இதில் குறிப்பாக சில இடங்களில் வேட்பளார்களை விட நோட்டாவுக்கு அதிகம் வாக்குகளும் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் தற்போது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், நோட்டாவுக்கு அதிக வாக்குகள் பதிவாகும் இடங்களில் மறுதேர்தல் நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் எழுத்தாளரும், பேச்சாளருமான ஷிவ் கேரா என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் எந்தவொரு வேட்பாளர்களை விடவும் நோட்டாவிற்கு அதிகபட்ச வாக்குகள் பதிவானால் அந்த தேர்தல் செல்லாது என அறிவிக்க வேண்டும். நோட்டாவை தேர்தலில் போட்டியிடும் ஒரு கற்பனை வேட்பாளராக விளம்பரம் செய்ய வேண்டும் என பல்வேறு விதிகளை கூறிய அவர், இதற்கான வழிகாட்டுதலை உருவாக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது நீதிபதி கூறியதாவது, இந்த விவகாரம் தேர்தல் செயல்முறை பற்றியதாகவும். இதற்கு தேர்தல் ஆணையம் என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம் என தெரிவித்து, இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதனிடையே, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறியதாவது, இந்த விவகாரம் ஒரு முக்கியமான பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. சூரத்தில் நடந்ததை அனைவரும் பார்த்திருப்போம். அங்கு காங்கிரஸ் வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டு, பிற வேட்பாளர்கள் வாபஸ் பெற்றதால் பாஜக வேட்பாளர் தேர்தல் இல்லாமலேயே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி இருந்தார்.