வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு வழக்கு… உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்.!
VVPAT Case : 100% தேர்தல் ஒப்புகை சீட்டு சரிபார்ப்பு கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்களை இதில் காணலாம்.
தேர்தல் வாக்குப்பதிவின் போது, EVM மிஷினில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் போது, VVPAT எனப்படும் தேர்தல் ஒப்புகை சீட்டுகளையும் 100 சதவீதம் என்ன வேண்டும் என்றும், EVM மிஷினில் உள்ள பாதுகாப்பு குறித்த கேள்விகள் தொடர்பாகவும், பழைய வாக்குசீட்டு முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் கொண்டு உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்ட்டன.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வந்தது. அப்போது நீதிபதிகள் வாக்குப்பதிவு இயந்திரத்தின் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளை கேட்டனர். அதற்கு தேர்தல் ஆணையம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
ECI விளக்கம் :
வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) , ஒப்புகை சீட்டு இயந்திரம் (VVPAT), கட்டுப்பாட்டு கருவி ஆகியவைகளில் தனித்தனியே மைக்ரோ கண்ட்ரோலர் பொருத்தப்பட்டு இருக்கும், அதில் ஒருமுறை மட்டுமே புரோகிராம் பதிவேற்ற முடியும், வாக்குப்பதிவுக்குப் பிறகு, EVM மிஷின், VVPAT இயந்திரம், கட்டுப்பாடு கருவி என மூன்றும் (BU, CU, VVPAT) சீல் வைத்து 30 நாட்களுக்கு வாக்குகளுடன் பாதிக்கப்படும். தேவை இருப்பின் அதன் கால அவகாசம் நீட்டிக்கப்படும் போன்ற விளக்கங்களை உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது.
இந்த விளக்கத்தை ஏற்று இன்று EVM மிஷின், VVPAT ஒப்புகை சீட்டு வழக்கின் தீர்ப்பு தற்போது அளிக்கப்பட்டது. அதில் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இரண்டு முக்கிய தீர்ப்புகளை கூறினர்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு :
முதலில், வாக்கு இயந்திர முறை (EVM மிஷின்) அகற்றி மீண்டும் காகித முறைப்படி வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. மேலும், அனைத்து EVM மிஷினோடு, VVPAT இயந்திரத்தை 100 சதவீதம் ஒப்பிட்டு பார்க்கும் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. VVPAT இயந்திரத்தில் பதிவாகும் வாக்குப்பதிவு சீட்டுகளை ஒரு பெட்டியில் சேகரிக்க வேண்டும் என்ற அனைத்து கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டு இது தொடர்பான அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டதாக நீதிபதி அமர்வு தீர்ப்பில் குறிப்பிட்டனர்.
தேர்தல் ஆணையத்திற்கான உத்தரவுகள் :
இரண்டாவதாக உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு, குறிப்பிடுகையில்,
மே 1, 2024க்குகு பிறகு EVM மிஷினில் பதிவு செய்யப்படும் அனைத்து சின்னங்களையும் அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையோடு சீல் செய்து பாதுகாக்க வேண்டும்.
அதில், வேட்பாளர்களின் பெயர், அவர்களின் சின்னத்துடன் இயந்திரத்தில் பாதுகாக்கப்பட வேண்டும். முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு குறைந்தபட்சம் 45 நாட்களுக்கு EVM மிஷின்கள் பாதுகாப்பு அறைகளில் வைத்து இருக்க வேண்டும்.
தேர்தல் முடிவுகளில் 2வது மற்றும் 3வது இடத்தைப் பெறும் வேட்பாளர்கள், ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 5% அளவுகளில் EVM மிஷின்களில் உள்ள நினைவக கண்ட்ரோலரைச் சரிபார்க்க உரிமை கோரலாம். முடிவுகள் அறிவிக்கப்பட்ட 7 நாட்களுக்குள் இதற்காக எழுத்துப்பூர்வமாக தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட வேண்டும்.
அத்தகைய எழுத்துப்பூர்வ கோரிக்கை எழுந்தால், EVMகள் தயாரிப்பாளரின் பொறியாளர்கள் குழுவால் EVMகள் சரிபார்க்கப்படும். இந்த சரிபார்ப்பின் போது வேட்பாளர்களும் அவர்களது பிரதிநிதிகளும் உடனிருக்கலாம்.
இந்நிகழ்வில் மாவட்ட தேர்தல் அதிகாரியும் உடனிருந்து அதன் நம்பகத்தன்மையை தெரிவிக்க வேண்டும். சரிபார்ப்பு செயல்முறைக்கான செலவுகள் விண்ணப்பதாரர் தான் தேர்தல் ஆணையத்தில் செலுத்த வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு கண்டறியப்பட்டால், அதற்கான செலவு வேட்பாளருக்குத் திருப்பி அளிக்கப்படும்
என்று தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் ஒப்புகை சீட்டு ஆகியவற்றை 100 சதவீதம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் கொண்ட வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தன.