வாட்ஸ்அப், ஃபேஸ்புக் நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்.!
புதிய தனியுரிமை கொள்கையை செயல்படுத்த தடை விதிக்க கோரிய மனு மீது பதிலளிக்க வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்.
டெல்லியை சேர்ந்த கர்மான்யா சிங் ஷரீன் என்பவர் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பதில் வாட்ஸ்அப் நிறுவனம் பாகுபாடு காட்டுகிறது என வாதிட்டார்.
அப்போது வாட்ஸ்அப், ஃபேஸ்புக் நிறுவனங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மக்களின் தகவல்களை பாதுகாக்க ஐரோப்பாவில் தனிச் சட்டம் உள்ளது. அது போன்ற சட்டம் இந்தியாவில் இல்லை என கூறினர். இந்தியாவிலும் அது போன்ற சட்டத்தை இயற்றினால், அது கடைப்பிடிக்கப்படும் என வாதிட்டனர்.
தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பது தங்களின் கடமை என உச்சநீதிமன்றம் தெரிவித்து, இந்த மனு தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க வாட்ஸ்அப், ஃபேஸ்புக் நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.