சண்டிகர் தேர்தலில் ஜனநாயக படுகொலை.! உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி.!
பல்வேறு கட்ட அரசியல் பரபரப்புக்கு மத்தியில் கடந்த ஜனவரி 30ஆம் தேதி சண்டிகர் மேயர் தேர்தல் நடைபெற்றது. சண்டிகர் மேயர் தேர்தல் அதிகாரியாக பொறுப்பில் இருந்த அணில் மாஷி தேர்தலை நடத்தினார். மொத்தமுள்ள 35 வார்டுகளில், பாஜக 14 இடங்களிலும், ஆம் ஆத்மி 13 இடங்களிலும், காங்கிரஸ் 7 இடங்களிலும், அகாலி தளம் ஒரு இடத்திலும் வெற்றி பெற்று உறுப்பினர்களை கொண்டு இருந்தன.
அமைச்சர்கள் சொத்துகுவிப்பு வழக்கு.. ஐகோர்ட்டுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
பாஜக சார்பில் மனோஜ் சோன்கரும், ஆம் ஆத்மி , காங்கிரஸ் கூட்டணியில் இருந்து குல்தீப் சிங்கும் மேயர் தேர்தலில் போட்டியிட்டனர். நடைபெற்று முடிந்த சண்டிகர் தேர்தலில், பாஜகவுக்கு 16 ஓட்டுகள் பதிவாகியதாகவும், காங்கிரஸ் – ஆம்ஆத்மி கூட்டணி வேட்பாளருக்கு பதிவான 20 ஓட்டுகளில் 8 ஓட்டுகள் செல்லாதவை என்றும், 12 ஓட்டுகள் மட்டுமே பதிவானதாகவும் தேர்தல் அதிகாரி அணில் மாஷி அறிவித்தார்.
இதற்கு நாடு முழுவதும் பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். மேலும், தேர்தல் அதிகாரி அணில் மாஷி வாக்கு சீட்டுகளை திருத்துவது போன்ற விடியோவும் இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக குல்தீப் சிங் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது
இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்த போது, நீதிபதி கடும் அதிருப்தியை பதிவு செய்தார். அவர் கூறுகையில், தேர்தல் அதிகாரி வாக்குச் சீட்டுகளை திருத்தம் செய்திருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. இது ஒரு ஜனநாயக படுகொலை ஆகும்.
இந்த சம்பவம் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்க்கியுள்ளது. தேர்தல் நடத்திய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு தேர்தல் அதிகாரியின் நடத்தை இதுதானா? தேர்தல் வாக்குச் சீட்டுகள், வீடியோகிராபி மற்றும் பிற பொருட்கள் உள்ளிட்ட தேர்தல் பொருட்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என கூறி கடும் அதிருப்தியை பதிவு செய்து விசாரணையை ஒத்திவைத்துள்ளார் தலைமை நீதிபதி சந்திரசூட்.