தேர்தல் சமயம்… கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்.? உச்சநீதிமன்றம் கருத்து.!
Arvind Kejriwal : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து நாங்கள் பரீசலிக்கலாம் என உச்சநீதிமன்றம் கருத்து கூறியுள்ளது.
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி மாநில முதல்வரும் , ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். தற்போது வரை அவர் டெல்லி திகார் சிறையில் அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் இருக்கிறார்.
அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது பற்றிய தங்கள் கருத்துக்களை கூறினர்.
உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு கூறுகையில், இந்த வழக்கு நிறைவடைய நீண்ட கால அவகாசம் தேவைப்படும். ஆனால், அதற்குள் டெல்லியில் தேர்தலும் நடைபெற உள்ளது. அதனால், கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் குறித்து நாங்கள் பரிசீலிக்கலாம் என்று வாய்மொழியாக உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு கூறியது .
எவ்வாறாயினும், இறுதியாக நாங்கள் எதையும் முடிவு செய்யவில்லை. எழுத்துபூர்வமாக இதனை நாங்கள் பதிவிடவில்லை. வழக்கின் விசாரணை விரைவில் முடிவடைய வாய்ப்பில்லை என்பதால், இடைக்கால நிவாரணமாக ஜாமீன் வழங்க பரிசீலிக்கப்படலாம் என்பதை மட்டுமே நாங்கள் கூறுகிறோம்
இதனை எங்கள் கருத்துக்களாகவோ அல்லது அறிவுறுத்தல்களாகவோ எடுத்துக் கொள்ளுங்கள். ஜாமீன் வழங்கப்படுமா இல்லையா என்பது குறித்து நாங்கள் எதுவும் கூறவில்லை. கெஜ்ரிவாலின் வழக்கறிஞர் இன்னும் இது பற்றி அவர் கூறவில்லை . அவர் கேட்காமல் இதுபற்றிய வாதத்தை தொடங்க வேண்டாம் என கூறி வழக்கை வரும் மே 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம்.
டெல்லியில் உள்ள மொத்தம் 7 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக 6ஆம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நாளான மே 25ஆம் தேதி நடைபெற உள்ளது.